விஷ்ணு கோவிலில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளை
குளச்சல் அருகே விஷ்ணு கோவிலில் உண்டியலை உடைத்து பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
குளச்சல்:
குளச்சல் அருகே விஷ்ணு கோவிலில் உண்டியலை உடைத்து பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
விஷ்ணு கோவில்
குளச்சல் களிமாரில் மகாவிஷ்ணு கோவில் உள்ளது. நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் பூஜை முடிந்த நிலையில் கோவிலை நிர்வாகிகள் பூட்டிவிட்டு சென்றனர்.
இந்தநிலையில் நேற்று காலை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் கோவிலின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடப்பதை கண்டு நிர்வாகிகளிடம் தகவல் தெரிவித்தனர்.
இதுபற்றி தகவல் அறிந்த நிர்வாகிகள் கோவிலுக்குள் சென்று பார்த்தனர். அப்போது, அங்கு வைக்கப்பட்டிருந்த உண்டியல் உடைக்கப்பட்டு கிடந்தது. யாரோ மர்ம நபர்கள் நள்ளிரவில் கோவிலுக்குள் புகுந்து உண்டியலை உடைத்து பணத்தை கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது. உண்டியலில் ரூ.8 ஆயிரம் இருந்து இருக்கும் என கூறப்படுகிறது.
2-வது முறையாக கொள்ளை
இதுகுறித்து கோவில் நிர்வாக தலைவர் பிரபாகரன் குளச்சல் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளையும் ஆய்வு செய்து வருகின்றனர்.
இதே கோவிலில் கடந்த சில மாதங்களுக்கு முன்பும் மர்ம நபர்கள் உண்டியலை உடைத்து பணத்தை கொள்ளையடித்துச் சென்றது குறிப்பிட்டத்தக்கது.