ரேஷன் கடையின் பூட்டை உடைத்து ரூ.18 ஆயிரம் திருட்டு
தஞ்சை அருகே ஆலக்குடியில் ரேஷன் கடையின் பூட்டை உடைத்து ரூ.18 ஆயிரத்தை திருடி சென்ற ஆசாமிகளை போலீசார் தேடி வருகிறார்கள். மேலும் அருகே உள்ள 4 பள்ளிகளில் புகுந்த ஆசாமிகள் அங்கு பணம் இல்லாததால் திரும்பி சென்றனர்.
வல்லம்;
தஞ்சை அருகே ஆலக்குடியில் ரேஷன் கடையின் பூட்டை உடைத்து ரூ.18 ஆயிரத்தை திருடி சென்ற ஆசாமிகளை போலீசார் தேடி வருகிறார்கள். மேலும் அருகே உள்ள 4 பள்ளிகளில் புகுந்த ஆசாமிகள் அங்கு பணம் இல்லாததால் திரும்பி சென்றனர்.
ரேஷன் கடை
தஞ்சை அருகே உள்ள ஆலக்குடியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் மூலமாக ரேஷன் கடை இயங்கி வருகிறது. இந்த கடை மூலம் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு அரிசி, சீனி, மண்எண்ணெய் உள்பட பல பொருட்கள் வினியோகிக்கப்பட்டு வருகிறது.இந்நிலையில் நேற்று முன் தினம் ரேஷன் கடையில் பொருட்கள் விற்பனை செய்த பணம் ரூ. 18 ஆயிரத்தை கடையில் வைத்துவிட்டு விற்பனையாளர்கள் கடையை பூட்டி விட்டு சென்றனர். நேற்று காலை ரேஷன் கடையின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்த கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்து வல்லம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
ரூ.18 ஆயிரம் திருட்டு
இதன்பேரில் சம்பவ இடத்துக்கு சென்ற வல்லம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது கடையில் இருந்த பணம் ரூ.18 ஆயிரம் திருட்டு போய் இருந்தது தெரிய வந்தது. இது குறித்த புகாரின் பேரில் வல்லம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதைப்போல ஆலக்குடியில் உள்ள4 அரசு பள்ளிகளின் அலுவலகத்தின் பூட்டுகளையும் உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர்கள் அங்கு பணம் இல்லாததால் திரும்பி சென்றுள்ளனர்.கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஆலக்குடியில் டிராக்டர்களின் பேட்டரிகளை மர்ம நபர்கள் திருடி சென்று உள்ளனர். இதனால் அப்பகுதியில் திருடர்களின் அட்டகாசத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.