என்ஜினீயரிடம் ரூ.40 லட்சம் அபேஸ்

ஆன்லைனில் முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம் எனக் கூறி என்ஜினீயரிடம் ரூ.40 லட்சம் அபேஸ் செய்யப்பட்டது. இது தொடர்பாக கிருஷ்ணகிரி சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2022-12-02 18:45 GMT

ஆன்லைனில் முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம் எனக் கூறி என்ஜினீயரிடம் ரூ.40 லட்சம் அபேஸ் செய்யப்பட்டது. இது தொடர்பாக கிருஷ்ணகிரி சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

என்ஜினீயர்

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை தாலுகா முத்தூர் அருகே உள்ள கொரனூரை சேர்ந்தவர் அஸ்வத் நாராயணா. இவரது மகன் மஞ்சுநாத் (வயது 33). இவர் பெங்களூருவில் தனியார் நிறுவனத்தில் டிசைன் என்ஜினீயராக பணிபுரிந்து வருகிறார்.

கடந்த மாதம் 12-ந் தேதி இவரது சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராம் பக்கத்திற்கு ஒரு விளம்பரம் வந்தது. வீணா என்று பெயர் குறிப்பிட்டு வந்த அந்த விளம்பரத்தில், எங்கள் நிறுவனத்தில் ஆன்லைனில் முதலீடு செய்தால் அதிக லாபம் சம்பாதிக்கலாம் என குறிப்பிடப்பட்டு இருந்தது.

ரூ.40 லட்சம் அபேஸ்

இதையடுத்து அதில் குறிப்பிட்டிருந்த செல்போன் எண்ணுக்கு மஞ்சுநாத் பேசினார். பின்னர் அவர்கள் கூறியபடி அவர்கள் தெரிவித்த 4 வங்கி கணக்குகளுக்கு ரூ.39 லட்சத்து 73 ஆயிரத்து 744 அனுப்பி வைத்தார். ஆனால் மஞ்சுநாத்திற்கு பணம் அனுப்பியது தொடர்பாக எந்த பதிலும் வரவில்லை.

இதனால் அதிர்ச்சி அடைந்த மஞ்சுநாத் தான் முதலில் பேசிய செல்போன் எண்ணை தொடர்பு கொண்டுள்ளார். அப்போது அந்த எண் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. இதையடுத்து பணம் அபேஸ் செய்யப்பட்டது குறித்து மஞ்சுநாத் கிருஷ்ணகிரி சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார்.

போலீசார் விசாரணை

அதன்பேரில் கிருஷ்ணகிரி சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் காந்திமதி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இன்ஸ்டாகிராமில் வந்த விளம்பரத்தை பார்த்து என்ஜினீயரிடம் ரூ.40 லட்சத்தை தனியார் நிறுவனம் ஆன்லைன் மூலம் அபேஸ் செய்த சம்பவம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்