மதுரை மின்வாரிய ஊழியரிடம் ரூ.2 லட்சம் மோசடி

சேலத்தில் ரூ.15 லட்சம் கடன் தருவதாக கூறி மதுரையை சேர்ந்த மின்வாரிய ஊழியரிடம் ரூ.2 லட்சம் மோசடி செய்த சம்பவம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Update: 2023-05-05 20:46 GMT

சேலத்தில் ரூ.15 லட்சம் கடன் தருவதாக கூறி மதுரையை சேர்ந்த மின்வாரிய ஊழியரிடம் ரூ.2 லட்சம் மோசடி செய்த சம்பவம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மின்வாரிய ஊழியர்

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் வீரபாண்டி (வயது 35). இவர், தமிழ்நாடு மின்சார வாரியத்தில் ஒப்பந்த அடிப்படையில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவரை கடந்த வாரம் சேலத்தை சேர்ந்த ஒருவர் செல்போனில் தொடர்பு கொண்டு தனது பெயர் சதீஷ் என்றும், நிதி நிறுவனம் நடத்தி வருவதால் ரூ.15 லட்சம் கடன் தருவதாகவும் தெரிவித்துள்ளார்.

இதற்கு மாதம் ரூ.6 ஆயிரம் தவணை செலுத்த வேண்டும். முன்வைப்பு தொகையாக ரூ.2 லட்சம் செலுத்தினால் ரூ.15 லட்சம் கடன் தொகை பெறுவதற்கான நடவடிக்கை எடுப்பதாகவும் அந்த நபர் தெரிவித்துள்ளார். இதற்காக சேலத்திற்கு வருமாறு அந்த நபர் கூறியுள்ளார்.

ரூ.2 லட்சம் மோசடி

இந்நிலையில், மதுரையில் இருந்து வீரபாண்டி ரூ.2 லட்சத்துடன் நேற்று மதியம் சேலத்திற்கு வந்தார். பின்னர் அவர் கலெக்டர் அலுவலக வளாகத்திற்கு சென்று அங்கிருந்த சதீஷ் மற்றும் அவரது நண்பர் விஷ்ணு ஆகியோரை சந்தித்து பேசினார். அப்போது, வீரபாண்டியிடம் இருந்து ரூ.2 லட்சத்தை சதீஷ் பெற்றுக்கொண்டு அதை மாவட்ட கருவூலகத்தில் செலுத்தி ஒப்பந்த பத்திரம் வாங்கி வருவதாக கூறி சென்றார். ஆனால் நீண்ட நேரம் ஆகியும் அவர் வரவில்லை. இதனால் அவர் கடன் தருவதாக கூறி ரூ.2 லட்சத்தை மோசடி செய்து ஏமாற்றியது தெரியவந்தது.

இது குறித்து சேலம் டவுன் போலீஸ் நிலையத்தில் வீரபாண்டி புகார் செய்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து பணம் மோசடி செய்த சதீஷ் மற்றும் அவருடன் வந்த விஷ்ணு ஆகியோரை வலைவீசி தேடி வருகின்றனர். அவர்கள் சேலத்தை சேர்ந்தவர்களா? உண்மையிலேயே நிதி நிறுவனம் நடத்தி வருகிறார்களா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். ரூ.15 லட்சம் கடன் தருவதாக கூறி மதுரை மின்வாரிய ஊழியரிடம் ரூ.2 லட்சம் மோசடி செய்த சம்பவம் சேலம் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்