பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு நிதி உதவி-கலெக்டர் தகவல்

Update: 2022-09-27 18:45 GMT

கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு நிதி உதவி வழங்கப்பட உள்ளதாக கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

நிதி ஆதரவு திட்டம்

கிருஷ்ணகிரி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் மூலம் ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ், மத்திய, மாநில அரசு பங்களிப்புடன் நிதி ஆதரவு திட்டமானது செயல்படுத்தப்பட்டுவருகிறது.

இந்த திட்டத்தின் மூலம் பயன்பெற குடும்ப ஆண்டு வருமானம் ரூ.24 ஆயிரம் (கிராமங்கள்), ரூ.30 ஆயிரம் (நகரங்கள்), ரூ.36 ஆயிரம் (மெட்ரோ நகரங்கள்) கொண்ட பெற்றோர்களில் ஒருவரை இழந்த குழந்தைகள் அல்லது 2 பேரையும் இழந்த குழந்தைகளுக்கு மாதம் ரூ.2 ஆயிரம் வீதம் அதிகபட்சமாக 3 ஆண்டுகளுக்கு வழங்கப்பட்டு வந்தது.

ஆண்டு வருமானம்

இந்தநிலையில் இந்த திட்டமானது மிஷன் வட்சாலயா என்று மத்திய அரசால் திருத்தி அமைக்கப்பட்டுள்ளது. மேலும், இதில் பயன்பெற குடும்ப ஆண்டு வருமானம் ஆண்டுக்கு ரூ.72 ஆயிரம் (கிராமங்கள்), ரூ.96 ஆயிரம் (நகரங்கள்) என்பதற்கு மிகாமல் இருக்க வேண்டும் என திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

எனவே பெற்றோரில் ஒருவர் அல்லது இருவரை இழந்த குழந்தைகள், உயிர் அச்சுறுத்தல் நோயினால் பாதிக்கப்பட்ட பெற்றோரின் குழந்தைகள், பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு தேவைப்படக்கூடிய குழந்தைகள் உள்ளிட்டோர் இந்த திட்டத்தின் கீழ் பயன்பெறலாம்.

இந்த திட்டம் குறித்த மேலும் விவரங்களை பெறவும், திட்டத்தில் பயன்பெறவும் கிருஷ்ணகிரியில் மாவட்ட மைய நூலகம் எதிரே டி.ஆர்.டி.ஏ. வணிக வளாகத்தில் செயல்பட்டு வரும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலரை தொடர்புகொள்ளலாம்.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார். 

மேலும் செய்திகள்