"நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று மோடி மீண்டும் பிரதமர் ஆவார்"-பா.ஜ.க. மாநில மகளிர் அணி தலைவி உமாரதி பேட்டி

“நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று மோடி மீண்டும் பிரதமர் ஆவார்” என பா.ஜ.க. மாநில மகளிர் அணி தலைவி உமாரதி தெரிவித்தார்.

Update: 2023-06-11 18:45 GMT

தமிழக பா.ஜ.க. மாநில மகளிர் அணி தலைவி உமாரதி நேற்று தென்காசியில் மாவட்ட பா.ஜ.க. அலுவலகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

கடந்த 9 ஆண்டு காலமாக பாரதீய ஜனதா கட்சி அரசு பல்வேறு நலத்திட்டங்களை கொடுத்துள்ளது. இருளில் இருந்த பாரதத்தை பிரதமர் மோடி மீட்டு ஒளி பெறச் செய்துள்ளார். அவர் ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு திட்டங்களை கொடுத்துள்ளார். அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரத்திற்காக மட்டுமே அவர் இந்த திட்டங்களை அளித்துள்ளார். தமிழகத்திற்கு ரூ.9.5 லட்சம் கோடி மதிப்பிலான நலத்திட்டங்களை வழங்கி உள்ளார்.

இன்னும் எவ்வளவோ திட்டங்கள் தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் இருந்து அகில இந்திய அளவில் நடைபெறும் விளையாட்டு போட்டிகளுக்கு யாரும் அனுப்பப்படவில்லை என்று தமிழக விளையாட்டு துறை அமைச்சரிடம் கேட்டபோது தகவல் பரிமாற்றம் சரியான அளவில் கிடைக்கவில்லை என்று கூறியது விளையாட்டுத்தனமாக இல்லையா?. கர்நாடக தேர்தலில் அடுத்த முறை பா.ஜ.க. வெற்றி பெறும். தமிழகத்தில் ஒரு முறை அ.தி.மு.க. அடுத்த முறை தி.மு.க. என்பது போன்று கர்நாடகத்திலும் உள்ளது. வருகிற நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. மீண்டும் வெற்றி பெற்று நரேந்திர மோடி பிரதமர் ஆவது உறுதி.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது கட்சி நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்