சிறு விவசாயிகளுக்கு நவீன எந்திரங்கள்
சிறு விவசாயிகளுக்கு நவீன எந்திரங்களை தேயிலை வாரிய செயல் இயக்குனர் முத்துகுமார் வழங்கினார்.;
பந்தலூர்
சிறு விவசாயிகளுக்கு நவீன எந்திரங்களை தேயிலை வாரிய செயல் இயக்குனர் முத்துகுமார் வழங்கினார்.
மானியத்தில் உபகரணங்கள்
தேயிலை வாரியம் சார்பில், விவசாயிகளுக்கு எந்திரங்கள் மற்றும் மானிய விலையில் உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி பந்தலூர் அருகே கையுன்னியில் உள்ள சிறு தேயிலை விவசாயிகள் சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு சங்க தலைவர் ஜோஸ் குறியன் தலைமை தாங்கினார். குன்னூர் தேயிலை வாரிய செயல் இயக்குனர் முத்துகுமார் கலந்துகொண்டு, தொழிலாளர் வங்கியை திறந்து வைத்தார்.
தொடர்ந்து ரூ.1 லட்சம் மதிப்பில் 5 விவசாயிகளுக்கு பச்சை தேயிலை பறிக்கும் எந்திரங்கள், மருந்து தெளிக்கும் எந்திரங்கள், மானிய விலையில் உபகரணங்களை வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
தேயிலை வாரியம் மூலம் சிறு விவசாயிகளுக்கு மானிய விலையில் பல்வேறு உபகரணங்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதை பயன்படுத்தி சிறு தேயிலை தோட்டங்களை நன்கு பராமரித்து, தரமான தேயிலை வழங்க வேண்டும். பச்சை தேயிலை விலை குறைவால், சிறு விவசாயிகள், தொழிலாளர்கள் பாதிக்கப்படுவதாக தெரிவித்தனர். இதுகுறித்து உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்படும்.
தொழிலாளர் வங்கி
பச்சை தேயிலையை கொப்புள நோய் தாக்குகிறது. இந்த நோயை கட்டுப்படுத்த குரூப்பாம் என்ற பூச்சிக்கொல்லி மருந்தை உபயோகப்படுத்த வேண்டும். தற்போது திறக்கப்பட்டு உள்ள தொழிலாளர் வங்கியை அனைவரும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.நிகழ்ச்சியில் கூடலூர் தேயிலை வாரிய உதவி இயக்குனர் ஜார்ஜ் சாமுவேல், குன்னூர் தேயிலை வாரிய இயக்குனர் பல்குனிபானர்ஜி, தேயிலை வாரிய உறுப்பினர் மனோஜ்குமார் மற்றும் அலுவலர்கள், விவசாயிகள் கலந்துகொண்டனர். முடிவில் சங்க செயலாளர் ராஜீவ் நன்றி கூறினார்.