திருச்சி மாநகர காவல்துறைக்கு நடமாடும் தடய அறிவியல் ஆய்வக வாகனம்

திருச்சி மாநகர காவல்துறைக்கு நடமாடும் தடய அறிவியல் ஆய்வக வாகனம் வழங்கப்பட்டது

Update: 2022-07-05 19:36 GMT


தமிழ்நாடு தடய அறிவியல் துறையின் பயன்பாட்டிற்காக குற்றம் நிகழ்விடத்திலேயே ஆரம்பக்கட்ட ஆய்வுகளை மேற்கொள்ள ஏதுவாக ரூ.3 கோடியே 92 லட்சத்து 70 ஆயிரம் செலவில் 14 நடமாடும் தடய அறிவியல் ஆய்வக வாகனங்களை தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமை செயலகத்தில் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த நடமாடும் தடய அறிவியல் ஆய்வகங்கள் மூலம் குற்றவாளிகளை விரைவில் கண்டறிய குற்ற நிகழ்விடத்திலேயே குற்றப்புலனாய்வாளர்களுக்கு அறிவியல்சார் சேவைகளை வழங்க முடியும்.

குறிப்பாக குற்றம் நிகழ்ந்த சம்பவ இடத்திலேயே ரத்தக்கறை, வெடி பொருட்கள், போதை பொருள் மற்றும் துப்பாக்கி சுடு படிமங்கள் ஆகியவற்றை நடமாடும் தடய அறிவியல் வாகனத்தில் உள்ள பரிசோதனை கூடத்தில் பரிசோதிக்க முடியும் என்பது சிறப்பு அம்சம் ஆகும். மேலும் குற்ற நிகழ்விடத்திலேயே குற்றச்செயலை அடையாளம் காணுவதற்கும், எவ்வித வெளிப்புற மாசுபடுதலுக்கும் தடய பொருட்கள் உட்படாதவாறு ஆய்வு மேற்கொள்வதற்கு வாகனம் உட்கட்டமைப்புடன் உருவாக்கப்பட்டுள்ளது. இதனால் குற்ற சம்பவங்களை குறுகிய காலத்தில் புலனாய்வு செய்து, குற்றத்தை கண்டுப்பிடிக்க முடியும்.

இந்த வாகனங்கள் சென்னை, திருச்சி, சேலம், நெல்லை மற்றும் திருப்பூர் மாநகர ஆணையரகங்கள், வேலூர், தர்மபுரி, கோவை, நீலகிரி, மதுரை, விழுப்புரம், ராமநாதபுரம், தஞ்சாவூர் ஆகிய காவல் மாவட்டங்களின் தடய அறிவியல் ஆய்வக பயன்பாட்டிற்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த பிரத்யேக நடமாடும் தடய அறிவியல் ஆய்வக வாகனம் நேற்று திருச்சிக்கு கொண்டு வரப்பட்டது. இதை மாநகர போலீஸ் கமிஷனர் ஜி.கார்த்திகேயன் பார்வையிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்