மொழி திணிப்பை தான் தி.மு.க. எதிர்க்கிறது; இந்தி கற்பதை எதிர்க்கவில்லை-இ.பெ.செந்தில்குமார் எம்.எல்.ஏ. பேட்டி
மொழி திணிப்பை தான் தி.மு.க. எதிர்க்கிறது என்றும், இந்தி கற்பதை எதிர்க்கவில்லை என்றும் இ.பெ.செந்தில்குமார் தெரிவித்தார்.
மொழி திணிப்பை தான் தி.மு.க. எதிர்க்கிறது என்றும், இந்தி கற்பதை எதிர்க்கவில்லை என்றும் இ.பெ.செந்தில்குமார் தெரிவித்தார்.
கண்டன ஆர்ப்பாட்டம்
தி.மு.க. இளைஞரணி, மாணவரணி சார்பில் திண்டுக்கல் தலைமை தபால் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு தி.மு.க. கிழக்கு மாவட்ட செயலாளர் இ.பெ.செந்தில்குமார் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்கள் கணேசன் (திண்டுக்கல் கிழக்கு), ஹரிகரசுதன் (திண்டுக்கல் மேற்கு), மாவட்ட மாணவரணி அமைப்பாளர்கள் அஸ்வின் பிரபாகரன், பொன்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினர்களாக வேலுச்சாமி எம்.பி., வேடசந்தூர் எம்.எல்.ஏ. காந்திராஜன் ஆகியோர் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில், இந்தி திணிப்பை கண்டித்தும், மத்திய அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் திண்டுக்கல் மாநகராட்சி மேயர் இளமதி, துணை மேயர் ராஜப்பா, ஒன்றிய செயலாளர் நெடுஞ்செழியன், மாவட்ட பொருளாளர் சத்தியமூர்த்தி, மாநகர பொருளாளர் சரவணன் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் திரளாக பங்கேற்றனர்.
மொழியை திணிக்க கூடாது
ஆர்ப்பாட்டத்தின் முடிவில், இ.பெ.செந்தில்குமார் எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதாவது:-
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையிலான குழு ஜனாதிபதியை சந்தித்து 112 பரிந்துரைகளை கொடுத்துள்ளது. அதில் இந்தியாவில் இந்தி மொழிக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுப்பது போல் ஒரு பரிந்துரை உள்ளது. அரசு அலுவலகங்களில் ஆங்கில மொழிக்கு பதிலாக இந்தியை பயன்படுத்த வேண்டும். போட்டித்தேர்வுகளில் ஆங்கிலத்துக்கு பதில் இந்தியில் கேள்விகள் அச்சிடப்பட வேண்டும் என்று அந்த பரிந்துரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது மற்ற மொழி பேசுபவர்களை அதிகம் பாதிக்கும். இந்தியாவில் 22 அலுவல் மொழிகள் உள்ளன.
ஆனால் ஒரே ஒரு மொழி தான் நாடு முழுவதும் அலுவல் மொழியாக இருக்க வேண்டும் என அவர்கள் கருதுகின்றனர். நாடு முழுவதும் அகழ்வாராய்ச்சிகள் மூலம் கிடைத்த கல்வெட்டுகளில் பயன்படுத்தப்பட்ட மொழிகளில் 65 சதவீதம் தமிழ் தான். இதனால் தான் மூத்த அறிஞர்கள் தமிழ் மிகவும் பழமையான மொழி என்கின்றனர். எல்லா மொழிகளையும் நாம் கற்றுக்கொள்ள வேண்டும். அதனால் தவறில்லை. எந்த ஒரு மொழியையும் திணிக்க கூடாது. அந்த பணியை தான் மத்திய அரசு தற்போது செய்கிறது. எனவே இந்தி மொழி திணிப்பை தான் தி.மு.க. எதிர்க்கிறதே தவிர இந்தி மொழி கற்பதை அல்ல.
இவ்வாறு அவர் கூறினார்.