பொன்முடிக்கு எம்.எல்.ஏ. பதவி மீண்டும் கிடைக்குமா? சட்டப்பேரவை செயலகம் விளக்கம்

சொத்துக் குவிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைத்து சுப்ரீம் கோர்ட்டு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

Update: 2024-03-11 10:38 GMT

சென்னை,

கடந்த 2006 முதல் 2011ம் ஆண்டு வரையிலான திமுக ஆட்சி காலத்தில், வருமானத்துக்கு அதிகமாக 1.75 கோடி ரூபாய் அளவிற்கு சொத்து சேர்த்ததாக அமைச்சர் பொன்முடி மற்றும் அவருடைய மனைவி விசாலாட்சி உள்ளிட்டோர் மீது 2011ம் ஆண்டில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கை விசாரித்த கீழமை நீதிமன்றம், 2016ல் பொன்முடி மற்றும் அவரது மனைவியை வழக்கிலிருந்து விடுவித்தது.

இந்த வழக்கு சென்னை ஐகோர்ட்டில் மீண்டும் நீதிபதி ஜெயச்சந்திரன் முன்னிலையில் விசாரிக்கப்பட்டு வந்தது. கடந்த டிசம்பர் 21-ம் தேதி இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி, பொன்முடி மற்றும் அவரது மனைவிக்கு மூன்று ஆண்டு சிறை தண்டனையும், தலா 50 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.

இதையடுத்து உடனடியாக பொன்முடி தனது அமைச்சர் பதவி மற்றும் எம்.எல்.ஏ., பதவிகளை இழந்தார். இருப்பினும் விழுப்புரம் நீதிமன்றத்தில் சரணடைய அவருக்கு 30 நாட்கள் அவகாசம் அளித்து நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.

இதையடுத்து சுப்ரீம் கோர்ட்டில், இந்த வழக்கு தொடர்பாக பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி ஆகியோர் மேல்முறையீடு செய்திருந்தனர். மூன்றாண்டு சிறை தண்டனைக்கு எதிராக இந்த வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கு இன்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது பொன்முடியின் மேல்முறையீட்டு வழக்கில் அவரது சிறை தண்டனையை நிறுத்தி வைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

பொன்முடி எம்.எல்.ஏவாக இருந்த திருக்கோவிலூர் தொகுதி சமீபத்தில் காலியானதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டு பொன்முடி மீதான தீர்ப்பை நிறுத்தி வைத்துள்ளதால், இந்த அறிவிப்பு வாபஸ் பெறப்படுமா என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்த நிலையில், எம்.எல்.ஏ பதவியை மீட்டுத்தரக் கோரி சட்டப்பேரவை செயலகம் அல்லது கோர்ட்டை பொன்முடி நாடலாம் என்று சட்டப்பேரவை செயலகம் தெரிவித்துள்ளது. ஊழல் தடுப்பு வழக்கில் இதுபோன்ற ஒரு நிலை முதல் முறை உருவாகியுள்ளதாகவும் சட்டப்பேரவை செயலகம் கூறியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்