அரசு விழாவில் எம்.எல்.ஏ. முன்னிலையில் காங்கிரஸ்-பா.ஜ.க.வினர் மோதல்

சாத்தான்குளம் அருகே அரசு விழாவில் எம்.எல்.ஏ. முன்னிலையில் காங்கிரஸ்-பா.ஜ.க.வினர் இடையே மோதல்ஏற்பட்டது. கலெக்டர் செந்தில்ராஜ் இருகட்சியினரையும் சமாதானம் செய்து வைத்தார்.

Update: 2023-03-16 18:45 GMT

சாத்தான்குளம்:

சாத்தான்குளம் அருகே நேற்று நடைபெற்ற அரசு விழாவில் ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. முன்னிலையில் காங்கிரஸ், பா.ஜ.க.வினர் இடையே மோதல் ஏற்பட்டது. கலெக்டர் செந்தில்ராஜ் தலையிட்டு இருகட்சியினரையும் சமாதானம் செய்து வைத்தார்.

அரசு விழா

சாத்தான்குளம் யூனியன் பள்ளக்குறிச்சி ஊராட்சிக்கு உட்பட்ட மணிநகரில் பழைய நிழற்குடையை அகற்றிவிட்டு, வணிக வளாகம் அமைக்க ஊராட்சி சார்பில் திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் எம்.எல்.ஏ. தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.5 லட்சம் மதிப்பில் புதிய பயணியர் நிழற்குடை அமைப்பதற்காக அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றது. இவ்விழாவில் பங்கேற்க ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ., கலெக்டர் செந்தில்ராஜ் ஆகியோர் வந்தனர்.

காங்கிரஸ்-பா.ஜ.க. மோதல்

அப்போது ஊராட்சித் தலைவரும், தெற்கு மாவட்ட பா.ஜ.க. தலைவருமான ஆர். சித்ராங்கதன் தலைமையில் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், பொதுமக்கள் மற்றும் பா.ஜ.க. நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித்து வணிக வளாகம் மட்டுமே அமைக்க வேண்டும். அதில் நிழற்குடை அமைக்க கூடாது என தெரிவித்தனர். இதனால் அங்கு காங்கிரஸ், பா.ஜ.க. நிர்வாகிகளிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு மோதல் உருவாகும் நிலை ஏற்பட்டது. உடன் கலெக்டர் தலையிட்டு மோதலை தடுத்தார்.

கலெக்டர் சமாதானம்

அப்போது, அதேஇடத்தில் வணிக வளாகம் மற்றும் நிழற்குடை அமைக்க நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் உறுதி அளித்தார். இதை இரு கட்சியினரும் ஏற்றுக் கொண்டனர். பின்னர் மாவட்ட கலெக்டர் தலைமையில் புதிய பயணியர் நிழற்குடை அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டது. இதில் மாவட்ட ஊராட்சித் தலைவர் பிரம்மசக்தி, மாவட்ட அறக்காவலர் குழு தலைவர் பார்த்திபன், சாத்தான்குளம் யூனியன் தலைவர் தலைவர் ஜெயபதி, பள்ளக்குறிச்சி ஊராட்சித் தலைவர் சித்ராங்கதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் எம்.எல்.ஏ. புதிய நிழற்குடை அமைக்க அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். இதில் திருச்செந்தூர் உதவி கலெக்டர் புகாரி, சாத்தான்குளம் தாசில்தார் தங்கையா, யூனியன் ஆணையர் ராணி, வட்டார வளர்ச்சி அலுவலர் சுரேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்