'மு.க.ஸ்டாலின் அறிவு, திறமையில் மூத்தவர், நாங்கள் இளையவர்' - துரைமுருகன் புகழாரம்

வயதில் நாங்கள் மூத்தவர்களாக இருந்தாலும் அறிவு, திறமையில் எங்களைவிட மூத்தவர் மு.க.ஸ்டாலின் என்று கருணாநிதி சிலை திறப்பு விழாவில் அமைச்சர் துரைமுருகன் பேசினார்.;

Update: 2022-05-29 01:17 GMT

கருணாநிதி சிலை திறப்பு விழாவில் தமிழக அரசின் நீர்வளத்துறை அமைச்சரும், தி.மு.க. பொதுச்செயலாளருமான துரைமுருகன் வரவேற்புரை ஆற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-

கருணாநிதி சிலை அமைந்துள்ள இந்த இடம் ஒரு காலத்தில் சாதாரண இடமாக காட்சி அளித்தது. அதை தமிழக அரசின் தலைமை செயலகமாக, சட்டப்பேரவை நடக்கிற இடமாக மாற்றி ஒரு மகத்தான கட்டிடத்தை எழுப்பியவர் கருணாநிதி. ஒவ்வொரு நாளும் காலையிலும், மாலையிலும் அந்த இடத்துக்கு வந்து ஒவ்வொரு செங்கலையும் பார்த்து, பார்த்து அடுக்கிவிட்டு எழுப்பியவர். அவர் கனவு நனவாகி வந்த நேரத்தில் அதை மீண்டும் ஒரு மாயைக்கு கொண்டு போய்விட்டார்கள். ஆனாலும் முடியாததை முடித்துக்காட்டுவதில் கருணாநிதிக்கு நிகர் கருணாநிதிதான். அதே போன்று நம்முடைய மு.க.ஸ்டாலினுக்கு நிகர் மு.க.ஸ்டாலின்தான்.

இந்த இடத்தில்தான் கருணாநிதி சிலை திறக்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் சொன்னபோது, 'அப்பாவுக்கு தப்பாமல் பிறந்திருக்கிறாரே...' என்று அசந்துவிட்டேன். இந்த சிலையை இங்கு வைத்தால் எப்படிப்பட்ட பேச்சு எல்லாம் வரும் என்பதை நினைத்து இந்த இடத்தை தேர்வு செய்திருக்கிறார்.

மு.க.ஸ்டாலினை விட நாங்கள் மூத்தவர்களாக இருக்கலாம். ஆனால் உங்கள் (மு.க.ஸ்டாலின்) அறிவு, திறமைக்கு முன்னால் நாங்கள் இளையவர்கள். நீங்கள் பெரியவர்.

துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு நம்முடைய சென்னைக்கு வேண்டியவர். சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள என் வீட்டுக்கு எதிர் வீட்டுக்காரர். எனவே இந்த மண்ணின் வாசனையோடு கலந்தவர்.

எங்கள் தலைவரை கைது செய்தபோது, நீங்கள் (வெங்கையா நாயுடு) எங்கள் அறிவகத்துக்கு வந்தீர்கள். நீங்கள் பட்ட பாட்டை நான் நேரில் இருந்து பார்த்தவன். அப்போது இவர் மத்திய மந்திரியாக இருந்தார். வாஜ்பாய்க்கு போன் போட்டு துடித்தார். அந்த துடிப்புதான் இன்றைக்கு கருணாநிதி சிலையை திறப்பதற்கு உங்களுக்கு வாய்ப்பாக கிடைத்திருக்கிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

மேலும் செய்திகள்