காணாமல்போன நோயாளி ஏரியில் பிணமாக மீட்பு
பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் காணாமல்போன நோயாளி ஏரியில் பிணமாக மீட்கப்பட்டார்.
வெள்ளந்தாங்கியம்மன் ஏரியில்...
பெரம்பலூர் சங்குபேட்டை பின்புறம் உள்ள பெரம்பலூர் கீழேரி எனப்படும் வெள்ளந்தாங்கி அம்மன் ஏரியில் நேற்று காலை 6.15 மணியளவில் சுமார் 30 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் இறந்த நிலையில் மிதந்து கொண்டிருந்தார். அவர் உள்ளாடை மட்டும் அணிந்திருந்தார். இதனை கண்ட அந்த வழியாக சென்றவர்கள் இதுகுறித்து பெரம்பலூர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சக்திவேல் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று ஏரியில் பிணமாக மிதந்து கொண்டிருந்த ஆண் உடலை பார்வையிட்டனர். பின்னர் போலீசார் பெரம்பலூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் உதவியுடன் ஏரியில் இருந்து இறந்தவரின் உடலை மீட்டு வெளியே கொண்டு வந்து பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மருத்துவமனையில் இருந்து தப்பித்தவர்
அதனை தொடர்ந்து போலீசார் இறந்தவர் யார்?, அவர் எந்த ஊரைச் சேர்ந்தவர்?, எப்படி இறந்தார்? என்பது குறித்து விசாரணை நடத்தினர். ஏரியில் பிணமாக மிதந்தவர் கடலூர் மாவட்டம், திட்டக்குடி தாலுகா, கொரக்கவாடி கிராமத்தை சேர்ந்த மருதமுத்துவின் மகன் மதியழகன் (வயது 29) என்பது தெரியவந்தது.
மதியழகன் அதிக மது போதையில் உயர் ரத்த அழுத்தத்தால் கீழே விழுந்ததில் தலையில் அடிபட்டு மனநலம் சரியில்லாதவர்போல் நடந்து கொண்ட காரணத்தால் சிகிச்சைக்காக அவரது குடும்பத்தினர் கடந்த 24-ந் தேதி காலை 10 மணியளவில் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் 25-ந் தேதி மாலை 5 மணியளவில் மருத்துவமனையில் இருந்து மதியழகன் தப்பித்து சென்றவர் மீண்டும் வீட்டிற்கு செல்லவில்லை.
போலீசார் விசாரணை
இதனால் அவரை அவரது குடும்பத்தினர், உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடினர். ஆனால் எங்கு தேடியும் மதியழகன் கிடைக்காததால் அவரது குடும்பத்தினர் பெரம்பலூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மதியழகனை தேடி வந்தனர். இந்த நிலையில் பெரம்பலூர் வெள்ளந்தாங்கியம்மன் ஏரியில் மதியழகன் நேற்று காலை இறந்த நிலையில் மிதந்து கொண்டிருந்தது விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர். மதியழகன் இறந்தது தொடர்பாக, அவரது குடும்பத்தினர், உறவினர்களுக்கு போலீசார் தகவல் தெரிவித்தனர்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் மதியழகன் உடலில் காயங்கள் ஏதும் இல்லாததால், அவர் ஏரியில் தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கி இறந்திருக்கலாம்? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த மதியழகனுக்கு சர்மிளா என்ற மனைவியும், 5 வயதில் கபில் வளவன் என்ற ஆண் குழந்தையும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.