காணாமல் போன கட்டிட தொழிலாளி காயங்களுடன் பிணமாக மீட்பு; அடித்துக் கொலையா? போலீசார் விசாரணை

தூத்துக்குடி அருகே புதுக்கோட்டையில் காணாமல் போன கட்டிட தொழிலாளி காயங்களுடன் பிணமாக மீட்கப்பட்டார். எனவே அவர் அடித்துக் கொலை செய்யப்பட்டாரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2023-08-19 18:45 GMT

தூத்துக்குடி அருகே புதுக்கோட்டையில் காணாமல் போன கட்டிட தொழிலாளி காயங்களுடன் பிணமாக மீட்கப்பட்டார். எனவே அவர் அடித்துக் கொலை செய்யப்பட்டாரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கட்டிட தொழிலாளி மாயம்

தூத்துக்குடி அருகே புதுக்கோட்டை அல்லிகுளம் பகுதியைச் சேர்ந்த முருகன் என்பவருடைய மகன் மகேந்திர பெருமாள் (வயது 23), கட்டிட தொழிலாளி. இவர் கடந்த 16-ந் தேதி முதல் காணாமல் போனார். இதனால் அவரது தாயார் பூமாரி, புதுக்கோட்டை போலீஸ் நிலையத்தில் 17-ந் தேதி புகார் செய்தார்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து காணாமல் போன மகேந்திர பெருமாளை தேடி வந்தனர்.

பிணமாக கிடந்தார்

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு அல்லிகுளம் அருகே உள்ள கல்குவாரி பகுதியில் வாலிபர் ஒருவர் பிணமாக கிடப்பதாக புதுக்கோட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். பிணத்தை கைப்பற்றி பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில், இறந்து கிடந்த அந்த வாலிபர், காணாமல் போன மகேந்திர பெருமாள் என்பது தெரியவந்தது.

அடித்துக் கொலையா?

மேலும் அவரது உடலில் காயங்கள் இருப்பதால் சந்தேக மரணம் என போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். எனவே யாரேனும் அவரை கொலை செய்தார்களா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்