பழனி அருகே இரட்டைத்தலை, 7 கால்களுடன் பிறந்த அதிசய எருமைக்கன்று

பழனி அருகே இரட்டைத்தலை, 7 கால்களுடன் அதிசய எருமைக்கன்று பிறந்தது.

Update: 2023-07-23 23:52 GMT

பழனி,

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள பொருந்தல் புளியம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் மகுடீஸ்வரன், விவசாயி. இவர் வளர்த்து வந்த எருமை மாடு ஒன்று சினையாக இருந்தது.

அது, கன்றை ஈன்ற முடியாமல் நேற்று தவித்தது. வெகுநேரம் ஆகியும் இயல்பாக கன்றை ஈன்ற முடியாமல் எருமை மாடு திணறியது.

இதையடுத்து மகுடீஸ்வரன், பழனி கால்நடை டாக்டர் முருகனுக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் மகுடீஸ்வரன் வீட்டுக்கு வந்து மாட்டை டாக்டர் பரிசோதனை செய்தார்.

சோதனையில், எருமையின் வயிற்றில் 2 கன்றுகள் இருப்பது தெரியவந்தது. இதுதொடர்பாக பழனி கால்நடை பராமரிப்பு உதவி இயக்குனர் சுரேசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவரது அறிவுறுத்தலின்படி, மருத்துவ குழுவினர் அங்கு விரைந்து வந்தனர்.

அறுவை சிகிச்சை

மருத்துவ குழுவினர் சோதனை செய்ததில், எருமை மாடு இயல்பாக ஈன்றக்கூடிய சூழலில் இல்லை என்பதை அறிந்தனர். எனவே அறுவை சிகிச்சை செய்து கன்றுகளை எடுக்க முடிவு செய்தனர்.

இதனையடுத்து வீட்டு அருகே உள்ள தொழுவத்தில் கிருமிநாசினி கொண்டு தூய்மைப்படுத்தி அங்கேயே அறுவை சிகிச்சை மேற்கொள்ள மருத்துவ குழுவினர் முடிவு செய்தனர்.

இதைத்தொடர்ந்து சுமார் 4 மணி நேரம் நடந்த அறுவை சிகிச்சைக்கு பின் எருமை கன்றை வெளியே எடுத்தனர். ஆனால் அந்த கன்று ஏற்கனவே இறந்து இருப்பது தெரியவந்தது.

இரட்டைத்தலை, 7 கால்கள்

அதேவேளையில் அந்த 2 கன்றுகளின் உடல்கள் ஒட்டி இருந்தது. மேலும் கன்றுக்கு இரட்டைத்தலை, 4 கண்கள், 7 கால்கள், 2 வால் இருந்தன. இந்த அதிசய கன்று குறித்த தகவல் காட்டுத்தீ போல பரவியது. இதனையடுத்து அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மகுடீஸ்வரன் வீட்டுக்கு வந்து அந்த கன்றை ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர்.

இதுகுறித்து கால்நடை டாக்டர் முருகன் கூறும்போது, 'வழக்கமாக பசு, எருமை மாடுகள் ஒரு கன்று மட்டுமே ஈன்றும். ஆனால் மரபணு குறைபாடு காரணமாக இதுபோன்று ஏற்படுவதற்கு வாய்ப்பு உண்டு. இந்த எருமை கன்றுகளின் உடல்கள் ஒட்டி இருந்தது. அதன் வௌிப்புறத்தில் இனப்பெருக்க உறுப்புகள் தென்படவில்லை. 2 கன்றுகள் இருந்ததால் எருமை மாடு ஈன்றுவதற்கு கடும் சிரமப்பட்டது.

நல்ல வேளையாக விரைந்து வந்து அறுவை சிகிச்சை செய்தோம். இதனால் எருமை மாடு உடல்நிலை நல்ல முறையில் உள்ளது' என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்