ஒண்டிவீரன் சிலைக்கு அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை
ஒண்டிவீரன் நினைவு தினத்தையொட்டி நெல்லையில் உள்ள அவரது சிலைக்கு அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
ஒண்டிவீரன் நினைவு தினத்தையொட்டி நெல்லையில் உள்ள அவரது சிலைக்கு அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
ஒண்டிவீரன் நினைவு தினம்
சுதந்திர போராட்ட வீரர் ஒண்டிவீரனின் 251-வது நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி நெல்லை பாளையங்கோட்டையில் உள்ள மணிமண்டபத்தில் இருக்கும் அவரது சிலைக்கு அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், ராஜகண்ணப்பன், மதிவேந்தன் ஆகியோர் ஒண்டிவீரன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
நினைவு சின்னங்கள்
பின்னர் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் கூறியதாவது:-
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி ஒண்டிவீரன் சிலைக்கு தமிழக அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டு உள்ளது. சுதந்திர போராட்டத்தில் தமிழர்கள் ஆற்றிய பங்குகளை எடுத்துக்காட்டும் விதமாக, சுதந்திர போராட்ட வீரர்களுக்கும், தியாகிகளுக்கும் இந்த அரசு மணிமண்டபம் அமைத்தும், நினைவு சின்னங்கள் எழுப்பியும் பராமரித்து வருகிறது.
நூலகம் விரைவில் திறப்பு
மேலும், ஒண்டிவீரன் புகழை பறைசாற்றும் விதமாக அவரது மணிமண்டபம் பராமரிக்கப்பட்டு, அங்கு ரூ.52 லட்சம் மதிப்பீட்டில் நூலகம் அமைக்கப்பட்டு உள்ளது. அதை விரைவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைக்க உள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில், கலெக்டர் விஷ்ணு, எம்.பி.க்கள் ஞானதிரவியம், அந்தியூர் செல்வராஜ், எம்.எல்.ஏ.அப்துல்வகாப், மேயர் பி.எம்.சரவணன், துணை மேயர் கே.ஆர்.ராஜூ, முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன், மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயஸ்ரீ, மாநகராட்சி ஆணையாளர் சிவகிருஷ்ணமூர்த்தி, முன்னாள் எம்.பி. விஜிலா சத்யானந்த், மண்டல தலைவர்கள் பிரான்சிஸ், மகேசுவரி, இளைஞர் அணி அமைப்பாளர் ஜான் ரவிந்தர், சூப்பர் மார்க்கெட் தலைவர் பல்லிக்கோட்டை செல்லத்துரை, கணேஷ்குமார் ஆதித்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
நினைவிடத்தில் மரியாதை
இதைத்தொடர்ந்து, தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் அருகே நெற்கட்டும்செவல் பச்சேரி கிராமத்தில் உள்ள ஒண்டிவீரன் நினைவிடத்தில் அரசு சார்பில் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் ஆகாஷ், தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் செல்லத்துரை, சதன் திருமலைக்குமார் எம்.எல்.ஏ. உள்பட பலர் கலந்து கொண்டனர்.