வேலை நேரத்தை உயர்த்தும் மசோதா குறித்து தொழிற்சங்க நிர்வாகிகளுடன் ஆலோசனை; அமைச்சர்கள் முன்னிலையில் நாளை நடக்கிறது
வேலை நேரத்தை 12 மணி நேரமாக உயர்த்தும் மசோதாவுக்கு எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது. இதனால் தொழிற்சங்க நிர்வாகிகளை அழைத்து அமைச்சர்கள் நாளை (திங்கட்கிழமை) ஆலோசனை நடத்துகிறார்கள்.
தொழிலாளர்களுக்கு 8 மணி நேர வேலை என்ற சட்டம் அமலில் இருந்து வரும் நிலையில், வேலை நேரத்தை 12 மணி நேரமாக உயர்த்தும் சட்ட மசோதா தமிழக சட்டசபையில் நேற்று முன்தினம் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவை தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் தாக்கல் செய்தார்.
கூட்டணி கட்சிகள் எதிர்ப்பு
இந்த மசோதாவுக்கு தி.மு.க. கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், ம.தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள், தமிழக வாழ்வுரிமை கட்சி எம்.எல்.ஏ.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பா.ம.க., பா.ஜ.க.வும் தங்கள் தரப்பு எதிர்ப்பை பதிவு செய்தது.
அதே நேரத்தில் குறிப்பிட்ட சில நிறுவனங்களுக்கு மட்டுமே இந்த விதிகள் பொருந்தும் என்றும், எல்லா நிறுவனங்களுக்கும் அல்ல என்றும், இந்த சட்டத்தின் மூலம் 3 நாட்கள் விடுப்பு அளிக்கப்படும் என்றும் அமைச்சர்கள் விளக்கம் அளித்தனர்.
முதல் முறையாக வெளிநடப்பு
அவர்களின் விளக்கம் ஏற்புடையதாக இல்லை என்றும், 8 மணி நேர வேலை சட்டத்தை நீர்த்து போக செய்யும் இந்த சட்டத்தை மறுஆய்வு செய்ய வேண்டும் என்றும், அதனை அமல்படுத்தக்கூடாது என்றும் கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் போராடியபோதும் சட்டசபையில் இந்த சட்ட மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.
இதை கண்டித்து முதல் முறையாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் வெளிநடப்பு செய்தன. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பையும் இந்த சம்பவம் பற்ற வைத்தது.
இந்த சட்ட மசோதாவை கண்டித்து கம்யூனிஸ்டு கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்ட-போராட்ட அறிவிப்புகள் வெளியிடப்பட்டு உள்ளன. அறிக்கையின் வாயிலாக இந்த சட்ட மசோதாவுக்கு அ.தி.மு.க. எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
தொழிற்சங்கங்களுடன் ஆலோசனை
இதற்கிடையே 12 மணி நேரமாக வேலை நேரத்தை உயர்த்தும் சட்ட மசோதா குறித்து விளக்கவும், தொழிற்சங்கத்தினர் கருத்துகளை அறியவும் அரசு சார்பில் ஆலோசனை கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இந்த கூட்டம் நாளை நடக்கிறது.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:-
கடந்த வெள்ளிக்கிழமை சட்டசபையில் 2023-ம் ஆண்டு தொழிற்சாலைகள் (தமிழ்நாடு திருத்த) சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டது.
இந்த சட்ட மசோதாவின் முக்கிய அம்சங்கள் குறித்தும், மத்திய அரசின் தொழிலாளர் நல சட்டத்தில் இருந்த தற்போது தமிழ்நாடு அரசு முன்மொழிந்திருக்கும் இந்த சட்டம் எவ்வாறு வேறுபட்டுள்ளது என்பதை விளக்கி கூறி, இந்த திருத்தத்தால் தமிழ்நாட்டிற்கு கூடுதலாக வரக்கூடிய முதலீடுகள் மற்றும் பெருகும் வேலைவாய்ப்புகள் குறித்தும் சட்டசபையில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வி.கணேசன், தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் விரிவாக விளக்கம் அளித்தார்கள்.
இருப்பினும், இந்த மசோதா குறித்து தொழிலாளர் சங்கங்கள் சில கருத்துகளை தெரிவித்து வருவதால் நாளை மதியம் 3 மணிக்கு தலைமைச் செயலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், தொழிலாளர் நலன் மற்றும் திறன்மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வி.கணேசன், தலைமைச் செயலாளர் இறையன்பு மற்றும் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் மற்றும் தொழிலாளர் நலத்துறை ஆணையர் ஆகியோர் முன்னிலையில் தமிழ்நாட்டில் உள்ள முக்கிய தொழிற்சங்கங்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.