காட்டுப்பள்ளியில் செயல்பட்டு வரும் கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்தில் அமைச்சர்கள் கே.என்.நேரு, காந்தி ஆய்வு
மீஞ்சூர் அருகே கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்தில் நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு மற்றும் கைத்தறித்துறை அமைச்சர் காந்தி ஆகியோர் ஆய்வு செய்தனர்.;
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட காட்டுப்பள்ளியில் கடல் நீரை சுத்திகரித்து குடிநீராக்கும் நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு நாள் ஒன்றுக்கு சுமார் 100 மில்லியன் லிட்டர் கடல் நீர் குடிநீராக மாற்றப்படுகிறது.
பின்னர் இங்கிருந்து குடிநீர் மாதவரம் நீரேற்று நிலையத்திற்கு ராட்சதக் குழாய்களில் செல்லகிறது. இதைபோல புழல் நீரேற்று நிலையத்திற்கும் செல்கிறது.
நீரேற்று நிலையத்தில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு குடிநீர் செல்கிறது. இந்த தண்ணீர் சென்னை மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரம் ஆகும்.
இந்நிலையில் நேற்று தமிழ்நாடு நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு மற்றும் கைத்தறித்துறை அமைச்சர் காந்தி ஆகியோர் காட்டுப்பள்ளியில் இயங்கி வரும் இந்த தொழிற்சாலைக்கு வந்து ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது தொழிற்சாலையில் உள்ள குடிநீர் சுத்திகரிப்பு எந்திரங்களை பார்வையிட்டு அதன் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தனர்.
பின்னர் அமைச்சர் கே.என்.நேரு மணலி, திருவெற்றியூர், எர்ணாவூர், கத்திவாக்கம், வியாசர்பாடி ஆகிய பகுதிகளுக்கு வழங்கப்படும் தண்ணீரை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தினந்தோறும் கண்காணித்து, பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வின் போது எம்.எல்.ஏ.க்கள், சென்னை குடிநீர் வாரி அதிகாரிகள் உள்பட பலர் உடனிருந்தனர்.