கோவில்களில் அமைச்சர் ஆய்வு

கோவில்களில் அமைச்சர் சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டார்

Update: 2022-07-29 16:24 GMT
மயிலாடுதுறை மாவட்டம், திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவில் நவக்கிரகங்களில் ஒன்றான புதனின் பரிகார தலமாக விளங்குகிறது. இந்த கோவிலுக்கு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு நேற்று வந்து சாமி தரிசனம் செய்தார். பின்னர், கோவிலில் ஆய்வு மேற்கொண்ட அவர் கோவிலில் மேற்கொள்ளப்பட உள்ள திருப்பணிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். முன்னதாக கோவிலுக்கு வந்த அவரை கோவில் நிர்வாக அதிகாரி முருகன் தலைமையில் அர்ச்சகர்கள் பூரண கும்ப மரியாதை அளித்து வரவேற்றனர்.

ஆய்வின்போது இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன், கலெக்டர் லலிதா, நிவேதா முருகன் எம்.எல்.ஏ., சீர்காழி தாசில்தார் செந்தில்குமார், தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் முத்து மகேந்திரன், மாவட்ட துணைச் செயலாளர் ஞானவேலன், பொருளாளர் ரவி மற்றும் இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.

நாகநாதர், காமாட்சி அம்மன் கோவில்

இதனைத் தொடர்ந்து கீழப்பெரும்பள்ளம் நாகநாத சுவாமி கோவிலில் அமைச்சர் சாமி தரிசனம் செய்தார். அங்கு அவரை கோவில் நிர்வாக அதிகாரி அன்பரசன் மற்றும் அர்ச்சகர்கள் வரவேற்றனர். இதேபோல, செம்பனார்கோவில் அருகே கருவாழக்கரை கிராமத்தில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான காமாட்சி அம்மன் கோவிலில் அமைச்சர் சேகர்பாபு சாமி தரிசனம் செய்தார். அப்போது அம்மனுக்கு பல்வேறு பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் அவர், விநாயகர் மற்றும் கோவிலில் உள்ள பரிவார தெய்வங்களை தரிசனம் செய்தார். முன்னதாக, அமைச்சருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் பூர்ண கும்ப மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. அவருடன் ஒன்றியக்குழு தலைவர் நந்தினி ஸ்ரீதர், தாசில்தார் புனிதா, வட்டார வளர்ச்சி அலுவலர் மஞ்சுளா மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.

சட்டைநாதர் கோவில்

அதனைத்தொடர்ந்து சீர்காழி சட்டைநாதர் கோவிலுக்கு சென்று அமைச்சர் அங்குள்ள சிவன் சன்னதி, திருநிலை நாயகி, முத்துச்சட்டை நாதர், சட்டைநாதர் உள்ளிட்ட சன்னதிகளில் சாமி தரிசனம் செய்தார். அமைச்சருக்கு தருமபுரம் ஆதீனம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. நகர்மன்ற தலைவர் துர்கா ராஜசேகரன், துணைத் தலைவர் சுப்பராயன், ஒன்றிய செயலாளர் பிரபாகரன் உள்பட பலர் உடன் இருந்தனர்.




Tags:    

மேலும் செய்திகள்