அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 25-ந் தேதி வருகை

புதுக்கோட்டை மாவட்டத்திற்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருகிற 25-ந் தேதி வருகை தருகிறார். இதையொட்டி கலெக்டர் கவிதா ராமு தலைமையில் முன்னேற்பாடு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

Update: 2023-05-17 19:02 GMT

உதயநிதி ஸ்டாலின்

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பதவியேற்றபின் ஒவ்வொரு மாவட்டமாக சுற்றுப்பயணம் சென்று ஆய்வு மேற்கொண்டு வருகிறார். மேலும் தமிழக அரசால் செயல்படுத்தப்படும் சிறப்பு திட்டங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்கிறார். மாவட்ட விளையாட்டரங்கங்களையும் பார்வையிடுகிறார். வளர்ச்சி பணிகள் குறித்து மக்கள் பிரதிநிதிகள், அதிகாரிகளுடன் கலந்து பேசி வருகிறார்.

அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு வருகிற 25-ந் தேதி உதயநிதி ஸ்டாலின் வருகை தர உள்ளார். புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறவுள்ள ஆய்வுக் கூட்டத்தில் அவர் கலந்து கொண்டு, அனைத்துத்துறைகளின் திட்டப் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ள உள்ளார்.

முன்னேற்பாடு பணி

இதையொட்டி முன்னேற்பாடு பணியாக, புதுக்கோட்டை மாவட்டத்தில் அனைத்துத்துறைகளின் சார்பில் செயல்படுத்தப்பட்டுள்ள நலத்திட்டங்கள் மற்றும் வளர்ச்சிப் பணிகள் குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடனான கலந்தாய்வு கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.

கூட்டத்திற்கு கலெக்டர் கவிதா ராமு தலைமை தாங்கினார். கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருகை தொடர்பாக முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆலோசனையும் மேற்கொள்ளப்பட்டது. கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கவிதப்பிரியா, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) தங்கவேல், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு திட்ட இயக்குனர் ரேவதி, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் கருணாகரன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மதியழகன் மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

அமைச்சரான பின் முதன் முறையாக...

அமைச்சராக பொறுப்பேற்ற பின் உதயநிதி ஸ்டாலின் முதன் முறையாக புதுக்கோட்டை மாவட்டத்திற்கு வருகை தருகிறார். இதனால் அவரை வரவேற்க தி.மு.க.வினரும் பலத்த ஏற்பாடுகளை செய்ய திட்டமிட்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்