பெரம்பலூர் மாவட்டத்திற்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நாளை வருகை

அரசு துறைகளின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களை ஆய்வு செய்ய பெரம்பலூர் மாவட்டத்திற்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நாளை வருகை தருவதாக கலெக்டர் கற்பகம் தெரிவித்துள்ளார்.

Update: 2023-07-05 18:30 GMT

பெரம்பலூர் மாவட்டத்திற்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நாளை (வெள்ளிக்கிழமை) வருகை தருகிறார். இதையொட்டி மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாட்டு பணிகள் குறித்து அரசு துறைகளின் முதல்நிலை அலுவலர்களுடான ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் கற்பகம் தலைமையில் நேற்று நடந்தது. கூட்டத்தில் கலெக்டர் கற்பகம் பேசுகையில், தமிழக அரசின் சார்பில் அனைத்து துறைகளின் மூலம் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்ட பணிகளின் முன்னேற்றம் குறித்து, துறை அலுவலர்களுடனான ஆய்வு கூட்டத்திற்கு தலைமையேற்று, திட்டங்களின் பணி முன்னேற்றம் தொடர்பாக ஆய்வு நடத்துவதற்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நாளை பெரம்பலூர் மாவட்டத்திற்கு வருகை தர உள்ளார். இது தொடர்பாக அனைத்து துறைகளின் அலுவலர்களும் தங்கள் துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப்பணிகளின் முழு விவரம் அடங்கிய தகவல்களை அறிக்கையாக அளித்திட வேண்டும். திட்டத்தின் நோக்கம், திட்டத்தின் செயல்பாடு, பயனடைந்த பயனாளிகளின் எண்ணிக்கை, அரசின் இலக்கீடு, எய்தப்பட்ட இலக்கீடு என அனைத்து தகவல்களையும் உள்ளடக்கியதாக அந்த அறிக்கை அமைந்திட வேண்டும். குறிப்பாக தமிழ்நாடு அரசின் முக்கிய திட்டங்களான முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம், புதுமை பெண் திட்டம், மகளிருக்கு அரசு டவுன் பஸ்களில் இலவச பயணம் திட்டம், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம், நான் முதல்வன் திட்டம், மக்களை தேடி மருத்துவம் உள்ளிட்ட திட்டங்கள் குறித்த விரிவான அறிக்கையினை இன்று (வியாழக்கிழமை) மதியத்திற்குள் அளித்திட வேண்டும், என்றார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் அங்கயற்கண்ணி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லலிதா, ஆர்.டி.ஓ. நிறைமதி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) மஞ்சுளா உள்ளிட்ட அனைத்து அரசு துறைகளின் முதல் நிலை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்