அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்தார்: மாணவர்களுடன் அமர்ந்து உணவு அருந்தினார்
சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைத்தார். அப்போது, மாணவர்களுடன் அமர்ந்து உணவு அருந்தினார்.;
சென்னை,
தமிழ்நாடு முழுவதும் அரசு பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு முதல்-அமைச்சரின் காலை உணவுத்திட்டம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 15-ந்தேதி தொடங்கி வைக்கப்பட்டது.
இந்த நிலையில் காலை உணவு திட்டம் நேற்று முதல் விரிவுபடுத்தப்பட்டது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளை, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் இதனை தொடங்கி வைத்தார்.
உதயநிதி ஸ்டாலின்
அதைதொடர்ந்து சென்னை மாநகராட்சியில் திருவல்லிக்கேணி நெடுஞ்சாலையில் உள்ள சென்னை நடுநிலைப்பள்ளியில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மாணவர்களுக்கு காலை உணவினை வழங்கி திட்டத்தை தொடங்கி வைத்தார்.
பின்னர் மாணவர்களுடன் அமர்ந்து உணவு அருந்தினார். அப்போது, "உங்கள் பெயர் என்ன? எங்கிருந்து வருகிறீர்கள்? சாப்பாடு எப்படி இருக்கிறது?" என்று கேட்டார். அதற்கு மாணவர்கள் தங்களது மழலை மொழியில் பதிலளிக்க அதைக்கேட்டு உதயநிதி ஸ்டாலின் மகிழ்ச்சி அடைந்தார். பின்னர் மாணவர்களுக்கு லட்டுகளையும் வழங்கினார்.
ஆய்வு
அதைதொடர்ந்து மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் வருகைப் பதிவேட்டினை ஆய்வு செய்தார். காலை உணவு குறித்த செயலியையும் ஆய்வு செய்தார்.
மாணவர்கள் பயன்படுத்தும் கழிவறைகள் தூய்மையாக இருக்கிறதா? என்று நேரில் கண்டறிந்தார். பள்ளியில் மேற்கொள்ளப்பட உள்ள மேம்பாட்டு பணிகள் குறித்த மாதிரி வரைபடங்களையும் அவர் பார்வையிட்டார்.
எனது முதல் பணி
பின்னர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நிருபர்களிடம் கூறியதாவது:-
நான் தமிழ்நாட்டின் எந்த மாவட்டத்துக்கு ஆய்வுப்பணிக்கு சென்றாலும் காலை உணவு திட்டம் குறித்து ஆய்வு செய்வதே எனது முதல் பணியாக இருக்கும். உணவின் தரம், மாணவர்கள் சாப்பிடுகிறார்களா?, வருகை பதிவேடு ஆகியவற்றை ஆய்வு செய்த பின்னரே அடுத்தகட்ட பணியில் ஈடுபடுவேன்.
காலை உணவுத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட பள்ளிகளில் 30 சதவீதம் முதல் 40 சதவீதம் வரை மாணவர்களின் வருகை அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டில் உள்ள 31 ஆயிரம் பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் 18 லட்சத்து 50 ஆயிரம் மாணவர்கள் இதன் மூலம் பயனடைவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
அமைச்சர்கள்
இதேபோல, சைதாப்பேட்டை தொகுதிக்குட்பட்ட மாந்தோப்பு சென்னை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனும், கொளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட மடுமாநகர் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் இந்து சமய அறநிலையத்தை அமைச்சர் சேகர்பாபுவும் மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கி மாணவர்களுடன் அமர்ந்து உணவு அருந்தினார்கள்.
358 பள்ளிகள்
இந்த திட்டத்தின் மூலம், சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட சென்னை தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி மற்றும் அரசு ஆதிதிராவிடர் நலப்பள்ளிகள் என மொத்தம் 358 பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் 65 ஆயிரத்து 30 மாணவ-மாணவிகள் கூடுதலாக பயன்பெறுவார்கள். மாணவர்களுக்கு சமையல் சமைத்து வழங்கும் வகையில் 35 மைய சமையல் கூடங்களிலிருந்து காலை உணவு தயாரிக்கப்பட்டு, அதற்கான வாகனங்கள் மூலம் பள்ளிகளுக்கு காலை உணவு கொண்டு செல்லப்படும். இந்த நிகழ்ச்சியில் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி., துணை மேயர் மகேஷ்குமார், மாநகராட்சி கமிஷனர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், மண்டலக்குழுத் தலைவர்கள் மதன்மோகன், சரிதா மகேஷ்குமார், கிருஷ்ணமூர்த்தி மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.