ஆசியாவின் சிறந்த ஜூனியர் தடகள வீரராக தேர்வாகியுள்ள செல்வபிரபுவுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து
ஆசியாவின் சிறந்த ஜூனியர் தடகள வீரராக தேர்வாகியுள்ள செல்வபிரபுவுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சென்னை,
ஆசியாவின் 20 வயதுக்கு உட்பட்டோருக்கான சிறந்த ஆடவர் தடகள வீரராக தமிழ்நாட்டைச் சேர்ந்த செல்வபிரபு தேர்வாகியுள்ளார். சமீபத்தில் நடைபெற்ற 20 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் மும்முறை தாண்டுதலில் செல்வபிரபு வெள்ளிப் பதக்கம் வென்றிருந்தார். இந்த நிலையில் ஆசியாவின் சிறந்த தடகள வீரர் என்ற அங்கீகாரம் அவருக்கு கிடைத்துள்ளது.
இதையடுத்து பலரும் அவருக்கு வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆசியாவின் சிறந்த ஜூனியர் தடகள வீரராக தேர்வாகியுள்ள செல்வபிரபுவுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், "ஆசியாவின் சிறந்த ஜுனியர் தடகள வீரராக நம் தமிழ்நாட்டின் மும்முறை தாண்டுதல் வீரர் செல்வபிரபு தேர்வு செய்யப்பட்டுள்ளது அறிந்து மகிழ்ந்தேன். ஆசியாவின் சிறந்த தடகள வீரர் என்ற மதிப்பிற்குரிய விருதினைப் பெற்று தமிழ்நாட்டுக்குப் பெருமை சேர்த்துள்ள தம்பி செல்வபிரபுவுக்கு வாழ்த்துகள். அவரது திறமைக்கு உலக அரங்கில் இன்னும் பல அங்கீகாரங்கள் கிடைப்பதற்குக் கழக அரசு என்றும் துணை நிற்கும்." இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.