சாலையில் மயங்கி கிடந்த வாலிபருக்கு உதவிய அமைச்சர் மா.சுப்பிரமணியன்
சாலையில் மயங்கி கிடந்த வாலிபரை சிகிச்சைக்காக அமைச்சர் மா.சுப்பிரமணியன், தனது சொந்த காரில் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். பின்னர் கட்சி நிகழ்ச்சிக்காக 'லிப்ட்' கேட்டு சென்றார்.;
சென்னை,
சென்னை மதுரவாயலில் கலைஞர் நூற்றாண்டு பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் இன்று இரவு நடந்தது. இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தனது காரில் சென்று கொண்டிருந்தார்.
மேற்கு சி.ஐ.டி. நகர் அருகே அவர் சென்று கொண்டிருந்த போது, சிலர் அங்கு கூடி நின்றனர். அவர்கள் பரபரப்பாக இருப்பதை பார்த்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் தனது காரை நிறுத்தி விசாரித்தார். அப்போது உணவு வினியோகிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த வாலிபர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் சென்ற போது திடீரென வலிப்பு ஏற்பட்டு சாலையில் மயங்கி விழுந்தது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து உடனடியாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தனது காரில் அந்த வாலிபரை கிண்டி கலைஞர் நூற்றாண்டு பல்நோக்கு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தார். மயக்கம் அடைந்த வாலிபருடன் அதே காரில் தனது பாதுகாப்பு அதிகாரியையும் அனுப்பி வைத்தார்.
இதன்பின்பு, அமைச்சர் அந்த வழியாக வந்த மற்றொரு காரில் 'லிப்ட்' கேட்டு மதுரவாயலில் நடந்த பொதுக்கூட்ட நிகழ்ச்சிக்கு சென்றார். பின்னர், ஆஸ்பத்திரியை தொடர்பு கொண்டு அங்கிருந்த டாக்டர்களிடம் அந்த வாலிபரின் உடல்நலம் குறித்து கேட்டறிந்தார்.
அதற்கு டாக்டர்கள், உயிருக்கு எந்த பாதிப்பும் இல்லை என்றும், தொடர்ந்து சிகிச்சை அளித்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர். இதைத்தொடர்ந்து அமைச்சர், டாக்டர்களிடம் வாலிபரை தொடர்ந்து கண்காணித்து தேவையான சிகிச்சையை அளிக்க உத்தரவிட்டார். அமைச்சரின் இந்த மனிதநேயமிக்க செயலை அங்கிருந்த பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.