"பள்ளிகளில் தரமான கல்வி வழங்குவதே தி.மு.க. அரசின் இலக்கு"; அமைச்சர் அர.சக்கரபாணி பேச்சு
அரசு பள்ளிகளில் உட்கட்டமைப்பை மேம்படுத்தி தரமான கல்வி வழங்குவதே தி.மு.க. அரசின் இலக்கு என்று அமைச்சர் அர.சக்கரபாணி பேசினார்.
அரசு பள்ளிகளில் உட்கட்டமைப்பை மேம்படுத்தி தரமான கல்வி வழங்குவதே தி.மு.க. அரசின் இலக்கு என்று அமைச்சர் அர.சக்கரபாணி பேசினார்.
விலையில்லா சைக்கிள்
பழனி அருகே தாழையூத்துவில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில், தமிழக அரசின் விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா நடைபெற்றது. இதற்கு பழனி ஆர்.டி.ஓ. சிவக்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட கல்வி அலுவலர் திருநாவுக்கரசு, பள்ளி தலைமை ஆசிரியர் நயினார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-
தி.மு.க. அரசு கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. இந்த நிதியாண்டில் கல்விக்கு மட்டும் ரூ.37 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அரசு பள்ளிகளில் உட்கட்டமைப்பை மேம்படுத்தி தரமான கல்வி வழங்குவதே தி.மு.க. அரசின் முக்கிய இலக்கு. அதற்கு ஏற்றாற்போல பல்வேறு திட்டங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு செய்து வருகிறது.
உதவித்தொகை திட்டம்
குறிப்பாக அரசு பள்ளியில் படித்து உயர்கல்வி படிக்கும் மாணவிகளுக்கு மாதாந்திர உதவித்தொகை திட்டம், 1 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டம் என பல்வேறு திட்டங்களை அரசு திறம்பட செய்து வருகிறது. எனவே மாணவ-மாணவிகள் கல்வியில் முழு ஆர்வம் செலுத்தி படிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த விழாவில் மாவட்ட ஊராட்சிக்குழு துணைத்தலைவர் பொன்ராஜ், மாவட்ட கவுன்சிலர் கிருஷ்ணசாமி, தொப்பம்பட்டி மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் சுப்பிரமணி, தலைமை பொதுக்குழு உறுப்பினர் வெங்கிடுசாமி, தொப்பம்பட்டி மேற்கு ஒன்றிய துணை செயலாளர் லலிதா சற்குரு மற்றும் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள் பலர் கலந்துகொண்டனர்.