கள்ளிமந்தையத்தை தலைமையிடமாக கொண்டு தனி தாலுகா உருவாக்கப்படும்; அமைச்சர் அர.சக்கரபாணி தகவல்

கள்ளிமந்தையத்தை தலைமையிடமாக கொண்டு தனி தாலுகா உருவாக்கப்படும் என்று அமைச்சர் அர.சக்கரபாணி தெரிவித்தார்.

Update: 2022-07-30 14:38 GMT

கள்ளிமந்தையத்தை தலைமையிடமாக கொண்டு தனி தாலுகா உருவாக்கப்படும் என்று அமைச்சர் அர.சக்கரபாணி தெரிவித்தார்.

புதிய ஒன்றிய அலுவலகம்

பழனி அருகே தொப்பம்பட்டியில் புதிய ஒன்றிய அலுவலகம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது. இதற்கு மாவட்ட கலெக்டர் விசாகன் தலைமை தாங்கினார். திண்டுக்கல் எம்.பி. வேலுச்சாமி, கூடுதல் கலெக்டர் தினேஷ்குமார், மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் பொன்ராஜ், தொப்பம்பட்டி ஒன்றியக்குழு தலைவர் சத்தியபுவனா, துணைத்தலைவர் பி.சி.தங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, ஒன்றிய அலுவலகம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டினார். பின்னர் நடந்த நிகழ்ச்சியில் அமைச்சர் பேசியதாவது:-

திண்டுக்கல் மாவட்டத்தில் அனைத்து ஒன்றிய பகுதிக்கும் புதிய அலுவலகம் கட்டும் பணிகள் நடந்து வருகிறது. சிறுமலை ஊராட்சியில் ரூ.60 லட்சத்தில் அனைத்து வசதிகளுடன் கூடிய ஊராட்சி கட்டிடம் கட்டப்பட உள்ளது. தமிழகத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டி நடத்தி உலக அளவில் தமிழகத்துக்கு பெருமை சேர்த்தவர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின். விரைவில் அனைத்து தொகுதிகளிலும் கபடி போட்டி நடத்த அவர் உத்தரவிட்டுள்ளார். அதேபோல் அனைத்து தொகுதிகளிலும் விளையாட்டு மைதானம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

தனி தாலுகா

தமிழகத்தில் 'எல்லோருக்கும் எல்லாம்' என்ற திட்ட அடிப்படையில் ஏழை மக்களுக்கு இலவச பட்டாவுடன் வீடு கட்டும் திட்டமும் அமல்படுத்தப்படுகிறது. வரும் 10 ஆண்டுகளில் குடிசை இல்லாத மாநிலமாக தமிழகம் மாற்றப்படும். ஒட்டன்சத்திரம், கீரனூரில் தலா ரூ.50 கோடியில் 500 வீடுகள் கட்ட அனுமதி வந்துள்ளது. மரிச்சிலம்பு கிராமத்தில் சுமார் ரூ.100 கோடியில் புதிய துணை மின் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இதேபோல் தும்பலப்பட்டி, அம்பிளிக்கை, கோதையுறம்பு, கொத்தயம் ஆகிய பகுதிகளிலும் துணை மின்நிலையம் அமைக்கப்பட உள்ளது. புகழ்பெற்ற பழனி முருகன் கோவிலை திருப்பதி போல் மாற்ற 'மாஸ்டர் பிளான்' திட்டம் தயாராக உள்ளது. தமிழகத்தில் 12 இடங்களில் தனியார் பங்களிப்புடன் நவீன அரிசி ஆலை அமைக்கப்பட உள்ளது. கள்ளிமந்தையத்தை தலைமையிடமாக கொண்டு தனி தாலுகா மற்றும் ஒன்றியம் உருவாக்கப்பட உள்ளது.

இவ்வாறு அவர் பேசினார். தொடர்ந்து அவர், மானூர் செங்கத்துறையில் விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று சண்முகநதி குறுக்கே ரூ.3 கோடியே 78 லட்சத்தில் உயர்மட்ட பாலம் கட்ட அடிக்கல் நாட்டினார்.

இந்த நிகழ்ச்சியில் திண்டுக்கல் மேற்கு மாவட்ட தி.மு.க. துணைச்செயலாளர் ராஜாமணி, ஒன்றிய செயலாளர்கள் சுப்பிரமணி (மேற்கு), தங்கராஜ் (கிழக்கு), மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஹரிகரசுதன், மாவட்டக்குழு உறுப்பினர் கிருஷ்ணசாமி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மணிமுத்து, தாஹீரா, தொப்பம்பட்டி ஊராட்சி தலைவர் ஈஸ்வரி ராமராஜ், ஒன்றிய கவுன்சிலர் மோகன்குமார் மற்றும் அரசு ஒப்பந்ததாரர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள், கட்சியினர் என பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்