அமைச்சர் சேகர்பாபு பதவி விலகக்கோரி தடையை மீறி ஆர்ப்பாட்டம்; பா.ஜ.க.வினர் 221 பேர் கைது
அமைச்சர் சேகர்பாபு பதவி விலகக்கோரி ஈரோட்டில் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பா.ஜ.க.வினர் 221 பேர் கைது செய்யப்பட்டனர்.
அமைச்சர் சேகர்பாபு பதவி விலகக்கோரி ஈரோட்டில் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பா.ஜ.க.வினர் 221 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஆர்ப்பாட்டம்
சனாதனத்துக்கு எதிராக கருத்து தெரிவித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை கண்டித்தும், அவர் கருத்து தெரிவித்த அதே மேடையில் அமர்ந்து இருந்து எதிர்ப்பு தெரிவிக்காத இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பதவி விலக கோரியும் பா.ஜ.க. சார்பில் ஈரோடு காளைமாட்டு சிலை பகுதியில் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது.
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் ஆன்மிக பிரிவு மாவட்ட தலைவர் பாலசரவணன் தலைமை தாங்கினார். கட்சியின் தெற்கு மாவட்ட தலைவர் வேதானந்தம், முன்னாள் மாவட்ட தலைவர் செந்தில்குமார், ஊடகப்பிரிவு மாவட்ட தலைவர் மகேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் தேசிய பொதுக்குழு உறுப்பினர் பழனிசாமி, தர்மபுரி மாவட்ட பார்வையாளர் முனிராஜ் உள்பட பலர் கலந்துகொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.
221 பேர் கைது
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு போலீசார் அனுமதி மறுத்து இருந்தனர். இதனால் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த சூரம்பட்டி போலீசார் கலைந்து செல்லும்படி அறிவுறுத்தினர். ஆனால் அவர்கள் தடையை மீறி தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்து போலீஸ் வாகனங்களில் ஏற்றினர்.
இதில் 54 பெண்கள் உள்பட மொத்தம் 221 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் ஈரோட்டில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். பின்னர் இரவில் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.