தைரியமிருந்தால் மின்துறை மீது வழக்கு தொடரட்டும்: அண்ணாமலைக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி பதிலடி

பிற மாநிலங்களை விட தமிழகத்தில் குறைந்த மின் கட்டணமே என அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.

Update: 2022-07-27 10:19 GMT

சென்னை,

தமிழ்நாடு அரசின் மின்சார கட்டண உயர்வைக் கண்டித்து பாஜக சார்ப்பில் கரூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், மத்திய அரசு மின் கட்டணத்தை உயர்த்த கடிதம் எழுதியுள்ளதாகக் கூறும் அமைச்சர் செந்தில்பாலாஜி அந்த கடிதத்தைக் காட்ட வேண்டும் எனக் கூறினார். மேலும், மத்திய அரசின் அனைத்து திட்டங்களிலும் 20% சதவிகித கமிஷன் பெறுவதாகத் தெரிவித்த அவர், தமிழ்நாட்டில் அதிகம் பொய் சொல்லக் கூடிய அமைச்சராக முதல்-அமைச்சர் முதல் இடத்திலும், அடுத்த இடத்தில் செந்தில்பாலாஜியும் உள்ளதாகத் தெரிவித்தார்.

இந்தநிலையில் சென்னை அண்ணா சாலையில் அமைந்துள்ள மின்வாரிய அலுவலகத்தில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இந்த ஆய்வுக் கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி,

திமுக ஆட்சியில் தான் அதிக அளவில் துணை மின் நிலையங்கள் அமைக்கப்பட்டு வருகிறது. மரபு சாரா எரிசக்தி மூலம் தமிழ் நாட்டில் கூடுதலாக 357 கோடி யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டிருக்கிறது. இது ஒரு மாபெரும் சாதனை. ஏழை மக்களை பாதிக்காத வகையிலேயே தமிழ்நாட்டில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் 100 யூனிட் வரை இலவசமாக மின்சாரம் வழங்கப்படுகிறது. அதே நேரம் பாஜக ஆளும் மாநிலங்களான கர்நாடகாவில் 100 யூனிட் மின்சாரத்திற்கு 592 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும், உத்தரபிரதேசம், குஜராத்தில் 100 யூனிட்டுக்கு 515 ருபாய் வசூலிக்கப்படுவதாகவும் கூறினார்.

தமிழ்நாடு அரசு தான் இந்தியாவிலேயே மிகக் குறைந்த கட்டணத்தில் பொதுமக்களுக்கு மின்சார சேவையை வழங்கி வருகிறது. தமிழ்நாட்டில்தான் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்படுகிறது.

ஏற்கனவே ஒரு லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின்சார இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. அடுத்தக்கட்டமாக வரும் செப்டம்பர் முதல் வாரத்தில் மேலும் 50ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்பட உள்ளதது. சூரிய மின்சக்தி பூங்கா விரைவில் திருவாரூரில் அமைக்கப்பட உள்ளது என்றார்.

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தன் மீது கூறிய ஊழல் குற்றச்சாட்டுக்களை மறுத்த செந்தில் பாலாஜி, தைரியமும் நேர்மையும் இருந்தால் இது தொடர்பாக நீதிமன்றத்தில் அண்ணாமலை வழக்கு தொடரட்டும் என்று சவால் விடுத்தார்.

அந்த வழக்கை தாம் எதிர்கொள்ள தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார். ஊடகத்தில் தன் முகத்தை காண்பிக்க வேண்டும் என்பதற்காக அண்ணாமலை தொடர்ந்து இது போன்ற பொய் புகார்களை தெரிவிப்பதாகவும் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி குற்றம்சாட்டினார்.

Tags:    

மேலும் செய்திகள்