அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 25-ந் தேதி வரை நீட்டிப்பு

அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை வரும் 25-ம் தேதி வரை நீட்டித்து சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Update: 2023-08-12 09:48 GMT

சென்னை,

சட்டவிரோத பண பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியை விடுவிக்க கோரி அவரது மனைவி மேகலா தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு செந்தில் பாலாஜி கைது சரியானது எனவும், அவரை காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கத் துறைக்கு அனுமதியளித்தும் தீர்ப்பளித்தது.

இதை எதிர்த்து மேகலா தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்த சுப்ரீம் கோர்ட்டு, 5 நாட்கள் செந்தில் பாலாஜியை காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கத் துறைக்கு அனுமதியளித்து தீர்ப்பளித்தது. இதை தொடர்ந்து, அமைச்சர் செந்தில் பாலாஜியை காவலில் எடுக்க கோரி அமலாக்கத் துறை தரப்பில் சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் கடந்த 7-ம் தேதி மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கில் அமலாக்கத்துறையினர், அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல் நிலையை கவனித்துக் கொள்ள வேண்டும் எனக் கூறி ஆகஸ்ட் 12ம் தேதி (இன்று) வரை காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கத்துறை வசம் ஒப்படைத்து நீதிபதி அல்லி உத்தரவிட்டார்.

இதனையடுத்து புழல் சிறையிலிருந்து அமைச்சர் செந்தில் பாலாஜி சாஸ்திரி பவனுக்கு அழைத்து வரப்பட்டார். அங்குள்ள 3-வது மாடியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணையை தொடங்கினர்.

5 நாட்களில் அவரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் சுமார் 300க்கும் மேற்பட்ட கேள்விகளை கேட்டதாக கூறப்படுகிறது. செந்தில் பாலாஜியின் வாக்குமூலம் வீடியோவாகவும், எழுத்துப்பூர்வமாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

நீதிமன்றகாவல் இன்றுடன் நிறைவடைந்த நிலையில் மருத்துவ பரிசோதனை முடிந்த பின் செந்தில்பாலாஜியை அமலாக்கத்துறை அதிகாரிகள் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன்பு ஆஜர்படுத்தினர்.

மேலும், இந்த வழக்கில் செந்தில்பாலாஜியிடம் மேலும் விசாரணை நடத்த வேண்டியுள்ளதால் நீதிமன்ற காவலை நீட்டிக்கும்படி அமலாக்கத்துறை சார்பில் வாதிடப்பட்டது.

இதனை தொடர்ந்து அமைச்சர் செந்தில்பாலாஜியின் நீதிமன்ற காவலை வரும் 25 ந்தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டு உள்ளார். நீதிபதியின் உத்தரவை தொடர்ந்து அமைச்சர் செந்தில் பாலாஜி மீண்டும் சிறைச்சாலைக்கு அழைத்து செல்லப்படுகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்