அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி அலுவலகத்துக்கு சீல் வைப்பு

அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி அலுவலகத்துக்கு சீல் வைத்து அமலாக்கத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.

Update: 2023-06-14 18:20 GMT

சென்னை மற்றும் கரூரில் உள்ள அமைச்சர் செந்தில்பாலாஜி வீடு உள்பட பல்வேறு இடங்களில் நேற்று முன்தினம் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

அந்தவகையில் கரூர் அருகே ராமேஸ்வரப்பட்டியில் உள்ள அமைச்சர் செந்தில்பாலாஜி வீடு, கரூர் ராமகிருஷ்ணபுரத்தில் உள்ள அவரது சகோதரர் அசோக்குமார் வீடு உள்பட கரூரில் 7 இடங்களில் துப்பாக்கி ஏந்திய துணை ராணுவ படையுடன் வந்து அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனை நேற்று முன்தினம் நள்ளிரவு நிறைவடைந்தது. இந்தநிலையில் கரூர் ராமகிருஷ்ணபுரத்தில் செயல்பட்டு வரும் அமைச்சர் செந்தில்பாலாஜியின் தம்பி அசோக்குமாரின் அலுவலகம் மற்றும் கரூர் வெங்கமேடு பகுதியில் உள்ள அமைச்சர் செந்தில்பாலாஜியின் முன்னாள் உதவியாளர் சண்முகம் என்பவரின் வீட்டுக்கும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சீல் வைத்து நோட்டீஸ் ஒட்டி நடவடிக்கை எடுத்துள்ளனர். அந்த நோட்டீசில், கரூர் ராமகிருஷ்ணாபுரத்தில் அமைந்துள்ள அசோக்குமார் அலுவலகத்தை அமலாக்க இயக்குனரகத்தின் அனுமதியின்றி இயக்கக் கூடாது எனவும், சென்னையில் உள்ள அமலாக்கத்துறை துணை இயக்குனர் கார்த்திக் தேசாரியை நேரில் சந்தித்து விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதேபோல் சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் அதிகாரப்பூர்வ பங்களா மற்றும் அவருடைய தம்பி அசோக்குமார் வீடு, அபிராமபுரத்தில் உள்ள அமைச்சரின் அரசியல் உதவியாளர் கோகுல் என்பவர் வீடு மற்றும் தலைமைச்செயலகத்தில் உள்ள அமைச்சரின் அறையிலும் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர்.

இந்த நிலையில் அபிராமபுரத்தில் அடுக்குமாடிக் குடியிருப்பில் வசிக்கும் உதவியாளர் கோகுலிடமும் அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தினர். இந்த நிலையில், கோகுலின் 2 வீடுகளுக்கு வருமானவரித்துறையினர் 'சீல்' வைத்து நோட்டீஸ் ஒட்டிச் சென்றுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்