பழனி, ஒட்டன்சத்திரத்தில் 180 இடங்களில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள்; அமைச்சர் அர.சக்கரபாணி தகவல்

பழனி, ஒட்டன்சத்திரத்தில் 180 இடங்களில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் அமைக்கப்பட உள்ளதாக அமைச்சர் அர.சக்கரபாணி தெரிவித்தார்.

Update: 2023-09-23 21:00 GMT

பழனி, ஒட்டன்சத்திரத்தில் 180 இடங்களில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் அமைக்கப்பட உள்ளதாக அமைச்சர் அர.சக்கரபாணி தெரிவித்தார்.

ஆய்வுக்கூட்டம்

ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து அனைத்துத்துறை அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகளுடனான ஆய்வுக்கூட்டம், ஒட்டன்சத்திரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு உணவுத்துறை அமைச்சர் அர.சக்கரபாணி, மாவட்ட கலெக்டர் பூங்கொடி ஆகியோர் தலைமை தாங்கினர். இதில், அனைத்துத்துறை அதிகாரிகள், அலுவலர்கள் கலந்துகொண்டனர். அப்போது ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் தொடர்பாக உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகளின் சந்தேகங்கள் மற்றும் கோரிக்கைகளுக்கு சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.

பின்னர் சாலையோர வியாபாரிகளுக்கான ஆதரவு திட்டத்தில் 41 பயனாளிகளுக்கும், 16 பூ வியாபாரிகளுக்கும், 26 உணவு வியாபாரிகளுக்கும் என மொத்தம் 83 பயனாளிகளுக்கு ரூ.61 லட்சம் மதிப்பிலான உதவித்தொகைகள் வழங்கப்பட்டது. ரூ.51 லட்சம் மதிப்பீட்டில் 7 குப்பை சேகரிக்கும் வாகனங்கள் பயன்பாட்டிற்கு வழங்கப்பட்டன. ஒட்டன்சத்திரத்தில் உள்ள மயானம், ரூ.41 லட்சத்தில் எரிவாயு மயானமாக மேம்படுத்தப்பட்டுள்ளது. மொத்தம் ரூ.1 கோடியே 53 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்டங்களை அமைச்சர் வழங்கினார்.

குடிசை இல்லா மாநிலம்

கூட்டத்தின்போது அமைச்சர் அர.சக்கரபாணி பேசியதாவது:-

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து, அத்திட்டங்கள் அனைத்தும் கடைகோடி மக்களையும் சென்றடையும் வகையில் சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். அதில் ஒன்று தான் பெண்களின் முன்னேற்றத்திற்காகவும், அவர்களின் வாழ்வினை வளப்படுத்திடும் பொருட்டும், குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத்திட்டம் ஆகும். கலைஞர் மகளிர் உரிமைத்தொகை கிடைக்கப்பெறாதவர்கள் தகுதியிருப்பின் கூடுதல் விவரங்களுடன் விண்ணப்பிக்கவும். விண்ணப்பிக்காதவர்கள் மீண்டும் விண்ணப்பிக்கவும் வாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

தமிழகத்தை குடிசை இல்லா மாநிலமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக ஏழை, எளிய வீடு இல்லாத மக்களுக்கு வீட்டுமனை பட்டாக்கள் வழங்கப்பட்டு, பல்வேறு திட்டங்களின் கீழ் வீடு வழங்கப்பட்டு வருகிறது. திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் 500 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு, கீரனூரில் 500 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

நீர்த்தேக்க தொட்டிகள்

திண்டுக்கல் மாவட்டத்தில் ஊராட்சி ஒன்றிய சாலைகளை மேம்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஒட்டன்சத்திரம், பழனி பகுதிகளில் காவிரி நீர் ஆதாரத்தைக்கொண்டு கூட்டுக்குடிநீர் திட்டம் செயல்படுத்த ரூ.1,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் 180 இடங்களில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் கட்டப்படவுள்ளன. அதற்கான பணிகள் தொடங்கப்பட்டுவிட்டன.

ஒட்டன்சத்திரம் நகராட்சி மற்றும் அதனை சுற்றியுள்ள ஊராட்சி பகுதிகளில் சேகரமாகும் குப்பைகளை ஒரு இடத்தில் குவித்து, திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் மக்கும், மக்காத குப்பைகள் என தரம் பிரித்து, அந்த குப்பைகளை மறுசுழற்சிக்கு பயன்படுத்தும் விதமாக உரங்களாக தயாரித்து விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. மேலும், 48 ஊராட்சிகளில் சேகரமாகும் குப்பைகளை ஒரு இடத்தில் குவித்து, உரம் தயாரிப்பு பணிகள் மேற்கொள்ள இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த கூட்டத்தில், ஒட்டன்சத்திரம் ஒன்றியக்குழு தலைவர் அய்யம்மாள், தொப்பம்பட்டி ஒன்றியக்குழு தலைவர் சத்தியபுவனா ராஜேந்திரன், மாவட்ட ஊராட்சிக்குழு துணைத்தலைவர் கா.பொன்ராஜ், ஒட்டன்சத்திரம் நகராட்சி தலைவர் திருமலைச்சாமி, துணைத்தலைவர் வெள்ளைச்சாமி, மாவட்ட வன அலுவலர் ராஜ்குமார், பழனி ஆர்.டி.ஓ. சரவணன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் ராணி, திண்டுக்கல் மண்டல கூட்டுறவு சங்கங்கள் இணைப்பதிவாளர் காந்திநாதன், ஒட்டன்சத்திரம் நகராட்சி ஆணையாளர் மீனா, சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் அனிதா, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர் மாரியப்பன், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்