கைதிகளால் நடத்தப்படும் பெட்ரோல் விற்பனை நிலையம்- அமைச்சர் ரகுபதி திறந்து வைத்தார்

மதுரையில் முதல் முறையாக கைதிகள் பணியாளர்களாக செயல்படும் பெட்ரோல் விற்பனை நிலையத்தை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தொடங்கி வைத்தார்.

Update: 2023-08-18 21:17 GMT


மதுரையில் முதல் முறையாக கைதிகள் பணியாளர்களாக செயல்படும் பெட்ரோல் விற்பனை நிலையத்தை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தொடங்கி வைத்தார்.

பெட்ரோல் விற்பனை நிலையம்

மதுரை மத்திய சிறை வளாகத்தில் இந்தியன் ஆயில் மற்றும் சிறைத்துறை சார்பில் அமைக்கப்பட்ட பெட்ரோல்-டீசல் விற்பனை நிலையம் திறப்பு விழா நேற்று நடந்தது. விழாவில் சிறப்பு விருந்தினராக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பங்கேற்று பெட்ரோல் விற்பனை நிலையத்தை திறந்து, பெட்ரோல், டீசல் விற்பனையை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது:- சிறைச்சாலை என்பது கைதிகளை தண்டிக்கக் கூடிய இடமாக இருக்கக்கூடாது. கைதிகளை திருத்தும் இடமாக அமைய வேண்டும் என முதல்-அமைச்சர் அறிவுறுத்தி உள்ளார். அதை பல்வேறு திட்டங்கள் மூலம் செயலாற்றி வருகின்றோம்.

சிறைகளில் சிறைவாசிகள் தயாரிக்கும் பொருட்களான சுங்கடிச் சேலை, போர்வை, மர சாமான்கள், கலப்படமற்ற எண்ணெய், உணவுப் பண்டங்கள் போன்ற பொருட்களுக்கு மக்களிடம் அதிக வரவேற்பு உள்ளது.

80 சதவீத தொகை

சிறைவாசிகள் ஈட்டும் வருவாய் மூலம் கைதிகள் தங்களது குடும்பத்தை நிர்வாகம் செய்து வருகிறார்கள். சிறைச்சாலையில் இருக்கும் கைதிகள் தகுதி உள்ள மனிதர்களாக உருவாக்கப்பட்டு வெளியில் செல்கின்றனர். இதுபோன்று மற்ற மாவட்டங்களில் சிறைவாசிகளால் நடத்தப்படும் எரிபொருள் விற்பனை நிலையங்கள் சிறப்பாக செயல்படுகின்றன.

குறிப்பாக சென்னையில் பெண் சிறைவாசிகள் நடத்தும் பெட்ரோல் விற்பனை நிலையம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. முதல்-அமைச்சர் சிறைத்துறை மீது தனிக்கவனம் எடுத்துக்கொண்டு இருப்பதால், பல்வேறு திட்டங்களை எங்களால் எளிதாக செயல்படுத்தப்படுகிறது. பெட்ரோல், டீசல் விற்பனை நிலையத்தில் கிடைக்ககூடிய 80 சதவீத தொகை சிறைவாசிகளுக்கு கொடுக்க முதல்-அமைச்சர் உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்படி அவர்களுக்கு உரிய தொகை வழங்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

35 கைதிகள்

இந்த விழாவில் சிறைத்துறை டி.ஜி.பி. அமரேஷ் பூஜாரி, இந்தியன் ஆயில் தலைமை இயக்குனர் அசோகன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.. மதுரை மாவட்டத்தில் முதல் முறையாக 35 சிறை கைதிகளால், இந்த பெட்ரோல்-டீசல் விற்பனை நிலையம் நடத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

மேலும் செய்திகள்