ஆசிய ஆக்கி கோப்பைக்கு அமைச்சர் ஆர்.காந்தி வரவேற்பு
ராணிப்பேட்டைக்கு வந்த ஆசிய ஆக்கி கோப்பைக்கு அமைச்சர் ஆர்.காந்தி வரவேற்பு அளித்தார்.
ஆக்கி இந்தியா மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் இணைந்து நடத்தும் 7-வது ஆசிய கோப்பைக்கான ஆண்கள் ஆக்கி போட்டி வருகிற 3-ந் தேதி முதல் 12-ந் தேதி வரை சென்னையில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் இந்தியா, பாகிஸ்தான், தென்கொரியா, ஜப்பான், சீனா, மலேசியா என 6 நாடுகளை சேர்ந்த அணிகள் பங்கேற்கிறது.
இந்த போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு வழங்கப்படும் பரிசு கோப்பை தமிழ்நாடு முழுவதும் உள்ள மாவட்டங்களுக்கு எடுத்து சென்று பொதுமக்களுக்கு அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது. அதன்படி ராணிப்பேட்டையில் உள்ள ஜி.கே. உலகப் பள்ளிக்கு கொண்டுவரப்பட்ட கோப்பைக்கு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி, கலெக்டர் வளர்மதி, போலீஸ் சூப்பிரண்டு கிரண் ஸ்ருதி ஆகியோர் வரவேற்பு அளித்தனர்.
தப்பாட்டம் அடித்தபடி வாத்தியங்கள் முழங்க ஆக்கி வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுடன் அமைச்சர் ஆர்.காந்தி ஆசிய கோப்பையை கைகளில் ஏந்தியவாறு நடந்து வந்தார்.
பின்னர் ஆசிய கோப்பையை அமைச்சர் பொதுமக்களுக்கு அறிமுகப்படுத்தி வைத்தார்.
சிறப்பு அழைப்பாளர்களுக்கு நினைவு பரிசு மற்றும் மரக்கன்றுகளை ஆக்கி விளையாட்டு வீரர்கள் வழங்கினர். இதில் ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர் ஜெ.எல்.ஈஸ்வரப்பன், நகரமன்ற தலைவர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.