உயர்கல்வியில் தமிழகம் சிறந்து விளங்குகிறது

அரசின் பல்வேறு திட்டங்களால் உயர் கல்வியில் தமிழகம் சிறந்து விளங்குகிறது என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பேசினார்.

Update: 2022-09-10 17:42 GMT

திருப்பத்தூர்,

அரசின் பல்வேறு திட்டங்களால் உயர் கல்வியில் தமிழகம் சிறந்து விளங்குகிறது என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பேசினார்.

தமிழகம் சிறந்து விளங்குகிறது

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே பூலாங்குறிச்சியில் உள்ள வி.எஸ். சிவலிங்கம் செட்டியார் அரசு கல்லூரியில் பொன் விழா ஆண்டு நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி தலைமை தாங்கினார். ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் முன்னிலை வகித்தார். உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு சிவலிங்கம் செட்டியார் உருவ சிலையை திறந்து வைத்து பேசியதாவது:- மாணவர்கள் அனைத்திலும் முதல்வனாக திகழவேண்டும் என்பதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நான் முதல்வன் திட்டத்தை அறிவித்து சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். சிவகங்கை மாவட்டத்தில் பல்வேறு தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களை உருவாக்கி, சாதி, மதம் பார்க்காமல் கல்வி சேவையை வழங்கி, பல மாணவர்கள் உயர்ந்த நிலையை அடைந்துள்ளனர்.

அந்த வகையில் இந்த கல்லூரியும் உருவாக்கப்பட்டு இதில் படித்த பல மாணவர்கள் தற்போது உயர்ந்த நிலையை அடைந்துள்ளனர். அரசு உயர்கல்வித்துறையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்துவதன் மூலமாக தற்போது உயர்கல்வியில் பிற மாநிலங்களை விட தமிழகம் 53 சதவீதம் பெற்று சிறந்து விளங்கி வருகிறது.

இருமொழி கல்வி

இருமொழிகல்வி கொள்கையை கொண்டு வந்தவர் முன்னாள் முதல்-அமைச்சர் அண்ணா. அவர் வழியில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியும் தாய் மொழியான தமிழையும், ஆங்கிலத்தையும் மாணவர்கள் கற்க வேண்டும் என்ற அடிப்படையில் கல்வியை ஆங்கில வழியிலும் படிக்கலாம், தமிழ் வழியிலும் படிக்கலாம் என்ற நடை முறையை உருவாக்கினார்.

அனைத்து விதமான நுழைவு தேர்வுகளையும் ரத்து செய்ததன் அடிப்படையில் கடந்த காலங்களில் உயர்கல்வி படித்து வந்ததை விட தற்போது அதிகமான மாணவர்கள் உயர்கல்வி படிக்கும் நிலை உருவாக்கப்பட்டுள்ளது. அரசு பள்ளிகளில் படிக்கும் கிராமப்புற மாணவர்களுக்கு மருத்துவ படிப்பிற்கான 7.5 சதவீத இட ஒதுக்கீட்டை அரசு வழங்கியுள்ளது.

பெண் கல்வி

கல்லூரி கட்டணம், விடுதி கட்டணம் ஆகியவற்றை அரசே ஏற்று மாணவர்களின் நலனை காத்து வருகிறது. இதுதவிர பெண் கல்வியை ஊக்குவிக்கும் வகையில் அரசுபள்ளிகளில் படித்து உயர்கல்வி படிக்கும் மாணவிகளுக்கு புதுமை பெண் திட்டத்தின் கீழ் மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தையும் முதல்-அமைச்சர் தற்போது தொடங்கி வைத்துள்ளார். எனவே மாணவர்கள் நன்றாக படித்து உயர்ந்த பதவிகளை அடைய வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் மதுரை மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குனர் பொன்முத்துராமலிங்கம், பட தயாரிப்பாளர் அபிராமி ராமநாதன், நல்லம்மை அபிராமி ராமநாதன், ஆவின் பால்வள தலைவர் சேங்கைமாறன், திருப்பத்தூர் தாசில்தார் வெங்கடசேன், கல்லூரி முதல்வர் முத்துச்சாமி, ஊராட்சி மன்ற தலைவர் சுதாகர் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள் மாணவர்கள் பலர் கலந்துகொண்டனர்.


Tags:    

மேலும் செய்திகள்