ஆவடி மாநகராட்சி பகுதிகளில் வெள்ள தடுப்பு பணிகளை அமைச்சர் நாசர் ஆய்வு

ஆவடி மாநகராட்சி பகுதிகளில் வெள்ள தடுப்பு பணிகளை அமைச்சர் நாசர் ஆய்வு செய்தார்.

Update: 2022-10-26 22:57 GMT

ஆவடி,

ஆவடி மாநகராட்சி மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் வெள்ள தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு துறை சார்ந்த பணிகளை தமிழக பால்வளத்துறை அமைச்சர் நாசர், திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பிஜான் வர்கீஸ் முன்னிலையில் நேற்று ஆய்வு செய்தார்.

முன்னதாக வெள்ளத்தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆவடி மாநகராட்சி பருத்திப்பட்டு பஜனை கோவில் தெருவில் நெடுஞ்சாலை துறை சார்பாக பருத்திப்பட்டு முதல் வசந்தம் நகர் வரை சாலையின் இருபுறமும் சுமார் 5 ஆயிரத்து 200 மீட்டர் அளவுக்கு ரூ.27.25 கோடியில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் மழைநீர் வடிகால்வாய் பணிகளை ஆய்வு செய்தார்.

அந்த பணிகளை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு அமைச்சர் அறிவுறுத்தினார்.

மொபட்டில் சென்றார்

பின்னர் அயப்பாக்கம் ஊராட்சி பகுதியில் பொதுப்பணித்துறை சார்பாக நடைபெற்று வரும் பருத்திப்பட்டு முதல் அயப்பாக்கம் வரையிலான சுமார் 2 ஆயிரத்து 500 மீட்டர் அளவுக்கு ரூ.21.90 கோடியில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் புதிய கால்வாய் அமைக்கும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மேலும் ஆவடி மாநகராட்சி மிட்னமல்லி ஏரிக்கரையின் மீது சுமார் 1350 மீட்டர் அளவுக்கு புதிதாக சாலை அமைத்து பொதுமக்களுக்கு பயனுள்ள வகையில் போக்குவரத்து வசதியை ஏற்படுத்தி தருவது குறித்து அமைச்சர் நாசர், மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் ஆகியோர் மொபட்டில் சென்று ஆய்வு செய்தனர். பின்னர் அப்பகுதி மக்களோடு கலந்துரையாடி, அவர்களது குறைகளை அமைச்சர் நாசர் கேட்டறிந்தார்.

அப்போது ஆவடி மாநகராட்சி மேயர் உதயகுமார், மாநகராட்சி கமிஷனர் க.தர்ப்பகராஜ் மற்றும் நெடுஞ்சாலைத்துறை, பொதுப்பணித்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.

ஹெல்மெட் அணியாத அமைச்சர்-கலெக்டர்

போக்குவரத்து விதிகளை மீறும் வாகன ஓட்டிகளிடம் கூடுதல் அபராதம் வசூலிக்கும் முறை நேற்று முதல் அமலுக்கு வந்தது. அதன்படி ஹெல்மெட் அணியாதவர்களிடம் போக்குவரத்து போலீசார் ரூ.ஆயிரம் அபராதம் வசூலித்தனர்.

ஆனால் மிட்னமல்லி ஏரிக்கரையின் மீது ெமாபட்டில் சென்று ஆய்வு செய்த அமைச்சர் நாசர் மற்றும் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் இருவரும் ஹெல்மெட் அணியாமல் சென்றதாக புகார் எழுந்தது. இருவரும் ஹெல்மெட் அணியாமல் மொபட்டில் செல்லும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்