நாமக்கல்லில் காலை உணவு திட்டம் தொடக்கம்: அமைச்சர் மதிவேந்தன் தொடங்கி வைத்தார்
அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார்.;
நாமக்கல்:
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் கனவு திட்டமான அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டம் தமிழகம் முழுவதும் நேற்று தொடங்கி வைக்கப்பட்டது. தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் இந்த திட்டத்தினை செயல்படுத்தும் வகையில் தமிழக அரசு ரூ.33.56 கோடி நிதி ஒதுக்கீடு செய்து உள்ளது.
வரலாற்று சிறப்புமிக்க இந்த திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், மதுரை கீழஅண்ணாதோப்பில் உள்ள ஆதிமூலம் மாநகராட்சி பள்ளியில் நேற்று தொடங்கி வைத்தார். அதனைத்தொடர்ந்து அவர், அந்த பள்ளியில் உள்ள குழந்தைகளுடன் அமர்ந்து உணவு சாப்பிட்டார். குழந்தைகளுக்கு உணவுகளை ஊட்டிவிட்டு மகிழ்ந்தார்.
இந்நிலையில் முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டத்தை நாமக்கல் கோட்டை துவக்கப்பள்ளியில் சுற்றுலாத்துறை அமைச்சர் டாக்டர் மதிவேந்தன், மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.என்.ராஜேஷ்குமார், நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் ராமலிங்கம் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா பி .சிங் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உமாமகேஸ்வரி, நகராட்சி ஆணையர் சுதா, நகராட்சி தலைவர் கலாநிதி, துணை தலைவர் பூபதி, பள்ளி தலைமை ஆசிரியை நிர்மலா, திமுக இலக்கிய அணி புரவலர் மணிமாறன், புதுச்சத்திரம் திமுக வடக்கு ஒன்றிய செயலாளர் கெளதம், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.