பத்மநாபபுரம் நகராட்சியில் குறைதீர்க்கும் நிகழ்ச்சி: 300-க்கும் மேற்பட்ட மனுக்களை பெற்ற அமைச்சர் மனோ தங்கராஜ்; உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவு

பத்மநாபபுரம் நகராட்சியில் நடந்த தீர்வுதளம் என்ற குறைதீர்க்கும் நிகழ்ச்சியில் பொதுமக்களிடம் இருந்து 300-க்கும் மேற்பட்ட மனுக்களை அமைச்சர் மனோ தங்கராஜ் பெற்றார்.

Update: 2022-08-26 18:36 GMT

தக்கலை,

பத்மநாபபுரம் நகராட்சியில் நடந்த தீர்வுதளம் என்ற குறைதீர்க்கும் நிகழ்ச்சியில் பொதுமக்களிடம் இருந்து 300-க்கும் மேற்பட்ட மனுக்களை அமைச்சர் மனோ தங்கராஜ் பெற்றார்.

குறைதீர்க்கும் நிகழ்ச்சி

பத்மநாபபுரம் நகராட்சியில் பொதுமக்களின் கோரிக்கை மனுக்களுக்கு உடனடி தீர்வு ஏற்படுத்துவதற்கான தீர்வு தளம் என்ற பெயரில் குறைதீர்க்கும் நிகழ்ச்சி நடந்தது.

இந்த நிகழ்ச்சிக்கு அமைச்சர் மனோதங்கராஜ் தலைமை தாங்கினார். நகர்மன்ற தலைவர் அருள் சோபன் முன்னிலை வகித்தார். இதில் பத்மநாபபுரம் சப்-கலெக்டர் அலர்மேல்மங்கை, கல்குளம் தாசில்தார் வினோத், நகராட்சி ஆணையர் லெனின், பல்வேறு துறைகளின் அலுவலர்கள், நகராட்சி கவுன்சிலர்கள், அரசு வக்கீல் ஜெகதேவ், தி.மு.க. நகர செயலாளர் சுபிகான், ஒன்றிய செயலாளர் அருளானந்த ஜார்ஜ், திருவிதாங்கோடு பேரூராட்சி தலைவர் நசீர், தொண்டரணி அஸீஸ், பத்ரியா மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் பொதுமக்கள் மத்தியில் அமைச்சர் மனோ தங்கராஜ் பேசுகையில் கூறியதாவது:-

சாலை பிரச்சினை சவால்

மாவட்டத்தில் தீர்வு தளம் நிகழ்ச்சி மூலமாக மக்களை சந்தித்து அவர்களின் கோரிக்கைகளை கேட்டு நியாயமாக கிடைக்க வேண்டிய சலுகைகள் கிடைக்கவில்லை என்றால் இதன்மூலம் தீர்வு ஏற்படுத்தி வருகிறோம். மாவட்டத்தின் கட்டமைப்பை வளர்த்தல், மாணவர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சியளித்து வேலைவாய்ப்பை பெற்றுக் கொடுத்தல், இயற்கை வளங்களை பாதுகாத்தல் என ஒவ்வொரு அம்சங்களாக திட்டம் தீட்டி வருகிறோம். நம் மாவட்டத்தில் சாலை பிரச்சினை ஒரு சவாலாக இருந்தது.

அதற்கு இப்போது ரூ.15 கோடி ஒதுக்கீடு அனுமதியை பெற்றிருக்கிறோம். இறந்தவர்களை எரியூட்டுவதற்கு பத்மநாபபுரம் நகராட்சி, அஞ்சுகிராமம், திற்பரப்பு ஆகிய இடங்களில் தலா ரூ.1½ கோடியில் மின்மயானங்கள் அமைப்பதற்கான பணிகள் நடந்து வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் பொதுமக்களிடமிருந்து 300-க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டன. அதனை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் அமைச்சர் மனோ தங்கராஜ் நேரிடையாக கொடுத்து உடனடி நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொண்டார்.

Tags:    

மேலும் செய்திகள்