அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் திடீர் ஆய்வு

திசையன்விளை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர், உரிய நேரத்தில் பணிக்கு வராத டாக்டர்கள், மருத்துவ பணியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.;

Update:2023-08-28 00:58 IST

திசையன்விளை:

திசையன்விளை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர், உரிய நேரத்தில் பணிக்கு வராத டாக்டர்கள், மருத்துவ பணியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

அமைச்சர் ஆய்வு

தமிழக மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று நெல்லை மாவட்டத்திற்கு வந்தார். அவர் திசையன்விளை மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு நேரில் சென்று திடீரென்று ஆய்வு செய்தார்.

டாக்டர்கள் மீது நடவடிக்கை

அப்போது, பணிக்கு உரிய நேரத்தில் வராத டாக்டர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவிட்டார். மேலும் மருத்துவமனை வளாகத்திற்குள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த நடமாடும் மருத்துவ வாகனத்தை பார்வையிட்டார். அதில் மருந்து பெட்டிகள் அடுக்கி வைக்கப்பட்டு பராமரிப்பு இல்லாமல் இருந்தது. இதுகுறித்து அங்கு பணியில் இருந்த நர்சுகளிடம், அமைச்சர் விசாரித்தார்.

அப்போது, அந்த வாகனத்தில் டிரைவர் பணிக்கு வராததையும், வாகனத்தில் மருந்து பாதுகாப்பு இன்றி இருப்பதையும் அறிந்து சம்பந்தப்பட்ட டிரைவர் மீது துறை ரீதியாக நடவடிக்கை மேற்கொள்ள சுகாதார துறை துணை இயக்குனருக்கு அவர் உத்தரவிட்டார்.

மருந்துகள் இருப்பு விவரம்

மேலும் நாய்க்கடி, பாம்பு கடி மருந்துகள் இருப்பு விவரத்தை அறிவிப்பு பலகையில் எழுதி வைக்க அறிவுறுத்தினார். தொடர்ந்து வருகை பதிவேடு, மருந்தகம், பரிசோதனை கருவிகள் முறையாக பராமரிக்கப்படுகிறதா? என்பதையும் அமைச்சர் ஆய்வு செய்தார். நோயாளிகளிடமும் உடல்நலம் குறித்து விசாரித்தார்.

காலியாக உள்ள பணி இடங்களை நிரப்ப வேண்டும் என அமைச்சரிடம், பணியாளர்கள் கோரிக்கை விடுத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்