தஞ்சைக்கு, 27-ந் தேதி முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை

தஞ்சைக்கு, 27-ந் தேதி முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை

Update: 2023-07-23 19:49 GMT

தஞ்சையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.140 கோடி மதிப்பில் கட்டி முடிக்கப்பட்ட 14 திட்ட கட்டிடங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 27-ந் தேதி திறந்து வைக்கிறார் என அமைச்சர் கே.என்.நேரு கூறினார்.

அமைச்சர் கே.என்.நேரு ஆய்வு

தஞ்சை மாநகரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் நடந்து வருகின்றன. இந்தநிலையில் ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் தஞ்சை புதிய பஸ் நிலையம் அருகே கட்டி முடிக்கப்பட்டுள்ள ஆம்னி பஸ் நிலையம், பல்நோக்கு அரங்கம் ஆகியவற்றை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேரு நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

திருச்சிக்கு தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 26-ந் தேதி காலையில் வருகிறார்.

திருச்சியில் நடைபெறும் வாக்குச்சாவடி நிலை முகவர்கள் கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார். மறுநாள் 27-ந் தேதி காலை 10 மணிக்கு திருச்சியில் நடைபெற உள்ள விவசாயிகள் சங்கமம் என்கிற கண்காட்சியைத் திறந்து வைத்து பேசுகிறார். நவீன கருவிகளை கொண்டு விவசாயம் செய்வது தொடர்பாக இந்த கண்காட்சி நடக்கிறது.

14 திட்ட பணிகள்

பிற்பகலில் தஞ்சைக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிறார். மாலை 5 மணியளவில் ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் புதிய பஸ் நிலையம் அருகே கட்டப்பட்டுள்ள ஆம்னி பஸ் நிலையம், பல்நோக்கு அரங்கம் உள்பட ரூ.140 கோடி மதிப்பில் நிறைவேற்றப்பட்ட 14 திட்ட பணிகளை திறந்து வைக்கிறார். வல்லம் குவாரி சாலைக்கு தமிழ்ச் சாலை எனவும் பெயர் சூட்ட இருக்கிறார்.

ஸ்மார்ட்சிட்டி திட்ட பணிகள் நடைபெறும் அனைத்து மாவட்டங்களில் 90 சதவீத பணிகள் முடிக்கப்பட்டு விட்டன. கொஞ்சம் தான் பணிகள் இருக்கிறது. சில இடங்களில் சட்டரீதியான பிரச்சினைகள் வந்து விட்டதால் நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது. அவற்றையும் விரைவாக முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

மேகதாது அணை

கர்நாடகத்தில் இருந்து தமிழ்நாட்டுக்கு இன்றுகாலை (நேற்று) வினாடிக்கு 4 ஆயிரத்து 800 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. தினந்தோறும் நாங்களும் கண்காணித்து வருகிறோம். டெல்டா மாவட்ட சாகுபடிக்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் என நீர்வளத்துறை அமைச்சரை டெல்லிக்கு அனுப்பி வைத்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொலைபேசி மூலமாகவும் பேசினார்.

24 மாதங்களில்...

டெல்டா மாவட்ட சாகுபடிக்கு தண்ணீர் பற்றாக்குறை இல்லாத அளவுக்கு முதல்-அமைச்சர் நடவடிக்கை எடுப்பார். மேகதாதுவில் எல்லா வகையிலும் அணை கட்ட விடமாட்டோம் என முதல்-அமைச்சரே கூறியிருக்கிறார். காவிரி கூட்டுக் குடிநீர் திட்டப் பணிகள் அனைத்து இடங்களிலும் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகின்றன. இந்த பணிகள் 24 மாதங்களில் முடிக்கப்பட்டுவிடும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆய்வின்போது மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப், திருவையாறு தொகுதி எம்.எல்.ஏ. துரை. சந்திரசேகரன், மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன், துணை மேயர் டாக்டர் அஞ்சுகம்பூபதி, கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) ஸ்ரீகாந்த், மாநகராட்சி ஆணையர் சரவணகுமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்