மேட்டூர் அணையில் அமைச்சர் கே.என்.நேரு ஆய்வு

மேட்டூர் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ள நிலையில், அங்கு அமைச்சர் கே.என்.நேரு ஆய்வு செய்தார்.

Update: 2022-10-20 19:45 GMT

மேட்டூர்:-

மேட்டூர் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ள நிலையில், அங்கு அமைச்சர் கே.என்.நேரு ஆய்வு செய்தார்.

நீர்வரத்து அதிகரிப்பு

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை நீடிப்பதால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. தற்போது மேட்டூர் அணையின் நீர்மட்டம் 120 அடியாக உள்ளது. நேற்று அணைக்கு வினாடிக்கு 1 லட்சத்து 5 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது.

அணையின் பாதுகாப்பு கருதி உபரி நீர் முழுவதும் 16 கண் மதகுகள் மற்றும் நீர்மின் நிலையங்கள் வழியாக வெளியேற்றப்பட்டு வருகிறது. மேலும் இன்று (வெள்ளிக்கிழமை) அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 2 லட்சம் கனஅடி வரை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என சேலம் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

அமைச்சர் ஆய்வு

இந்த நிலையில் நேற்று மாலை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே. என். நேரு மேட்டூர் அணையை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேட்டூர் அணையின் நீர் இருப்பு, நீர் வெளியேற்றம், அணையின் பாதுகாப்பு நடவடிக்கைகள் ஆகியவை குறித்து அதிகாரிகளுடன் கலந்து ஆலோசித்தார். மேலும் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வரும் நிலையில் உபரி நீர் திறப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதன் காரணமாக காவிரிகரையோர மக்கள் மற்றும் பொதுமக்களுக்கு செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து கேட்டு அறிந்தார்.

இதைத்தொடர்ந்து அமைச்சர் கே.என். நேரு கூறுகையில், காவிரி கரையோரங்களில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்்கு செல்ல அறிவுறுத்தப்பட்டு உள்ளது. காவிரி ஆற்றங்கரையோரம் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க போதுமான நிவாரண முகாம்கள் தயார் நிலையில் உள்ளன. மேலும், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை, தீயணைப்பு, நீர்வளம் உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகள் காவிரி கரையோர பகுதிகளில் இரவு, பகலாக தொடர் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே பொதுமக்கள் காவிரி ஆற்றில் குளிக்கவோ, துணி துவைக்கவோ, செல்பி எடுக்கவோ கூடாது என்று எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது என்றார்.

வரவேற்பு

ஆய்வின் போது அமைச்சருடன் பொதுப்பணித்துறையின் திருச்சி மண்டல தலைமை பொறியாளர் ராமமூர்த்தி, வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ., தி.மு.க. சேலம் மேற்கு மாவட்ட செயலாளர் டி. எம்.செல்வகணபதி, கிழக்கு மாவட்ட செயலாளர் எஸ்.ஆர். சிவலிங்கம், மாவட்ட வருவாய் அலுவலர் மேனகா, உதவி கலெக்டர் சரவணன் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

முன்னதாக மேட்டூர் அணைக்கு வந்த அமைச்சர் கே.என்.நேருவை மேட்டூர் நகர மன்ற தலைவர் சந்திரா, துணைத்தலைவர் காசி விஸ்வநாதன், பி.என்.பட்டி பேரூராட்சி மன்ற தலைவர் பொன்னுவேல், தி.மு.க. மாவட்ட பொருளாளர் பொன்னுசாமி, கொளத்தூர் ஒன்றிய செயலாளர் மிதுன் சக்கரவர்த்தி, நங்கவள்ளி ஒன்றிய ஒன்றிய செயலாளர் மடத்துப்பட்டி சின்னு என்கிற அர்த்தநாரீஸ்வரன், பேரூர் செயலாளர்கள் கே.ஆர்.எம். முருகன் உள்பட நிர்வாகிகள் வரவேற்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்