விருத்தாசலம்-உளுந்தூர்பேட்டை சாலை விரிவாக்க பணிஅமைச்சர் எ.வ.வேலு ஆய்வு

விருத்தாசலம்-உளுந்தூர்பேட்டை சாலை விரிவாக்க பணியை அமைச்சர் எ.வ.வேலு பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Update: 2023-04-22 19:44 GMT


விருத்தாசலம், 

சென்னை -கன்னியாகுமாரி வரை தொழில் தட சாலை அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இதில் விருத்தாசலம் - உளுந்தூர்பேட்டை இடையேயான 21 கிலோ மீட்டர் சாலை விரிவாக்க பணி, மங்கலம்பேட்டை புறவழிச்சாலை அமைக்கும் பணி, பயணியர் நிழற்குடை அமைக்கும் பணி, மரக்கன்றுகள் நடும் பணி, கல்வெட்டு பாலங்கள் அமைக்கும் பணி உள்பட பல்வேறு பணிகள் ஆசிய வளர்ச்சி வங்கி நிதி உதவியுடன் தீவிரமாக நடந்து வருகிறது. இப்பணிகளை நேற்று

பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது சாலையின் தரம் குறித்தும், சாலையின் நீளம், அகலம் குறித்தும் அமைச்சர் முன்னிலையில் அளவீடு செய்து சரிபார்க்கப்பட்டது. இதையடுத்து பணிகளை விரைந்து நல்ல தரத்துடன் முடிக்க வேண்டும் என அங்கிருந்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். பின்னர் அமைச்சர் எ.வ.வேலு நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழ்நாட்டில் 16 இடங்களில் இந்த பணிகள் நடைபெற்று வருகிறது. அதில் ஒரு பணியாக விருத்தாசலம் - உளுந்தூர்பேட்டை சாலை விரிவாக்க பணி நடைபெற்று வருகிறது. ஏற்கனவே இந்த சாலை ஏழு மீட்டர் சாலையாக இருந்தது. தற்போது 10 மீட்டர் சாலையாக விரிவாக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டது.

2 மாதத்தில் முடிவடையும்

இதற்காக ரூ.136 கோடி மதிப்பீடு செய்யப்பட்டு சாலை பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் இன்னும் 2 மாத காலத்தில் முடிவடையும் நிலையில் உள்ளது. நல்ல தரத்துடன் இந்த சாலை அமைக்கப்பட்டு வருகிறது என்றார். இந்த ஆய்வின்போது கட்டுமானம் மற்றும் பராமரிப்பு தேசிய நெடுஞ்சாலை தலைமை பொறியாளர் சந்திரசேகர், தொழில் தட திட்டம் கண்காணிப்பு பொறியாளர் செல்வதுரை, கோட்ட பொறியாளர் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு பரந்தாமன், கண்காணிப்பு பொறியாளர் சுந்தரி, உதவி கோட்டப் பொறியாளர் செந்தில்குமார் உள்பட பலர் உடனிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்