பலூன் திருவிழாவை அமைச்சர் ஆய்வு
பொள்ளாச்சி அருகே நடைபெறும் சர்வதேச பலூன் திருவிழாவை அமைச்சர் ராமச்சந்திரன் ஆய்வு செய்தார்.coi
பொள்ளாச்சி
பொள்ளாச்சி அருகே நடைபெறும் சர்வதேச பலூன் திருவிழாவை அமைச்சர் ராமச்சந்திரன் ஆய்வு செய்தார்.
பலூன் திருவிழா
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே ஆச்சிப்பட்டியில் தமிழக அரசின் சுற்றுலாத்துறை சார்பில் சர்வதேச வெப்ப காற்று பலூன் திருவிழா கடந்த 2 நாட்களாக நடைபெற்று வருகிறது. இந்த விழாவிற்கு பிரான்ஸ், தாய்லாந்து, நெதர்லாந்து உட்பட பல்வேறு நாடுகளில் இருந்து ராட்சத வெப்ப காற்று பலூன்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.
மேலும் தமிழக சுற்றுலா வளர்ச்சி துறையின் பலூன் விழாவில் பறக்க விடப்பட்டுள்ளது. பலூனில் பொதுமக்கள் பறந்து பொள்ளாச்சி அழகை கண்டு ரசித்தனர். மேலும் ஹெலிகாப்டர் மூலமும் பொதுமக்கள் பொள்ளாச்சியை சுற்றி வந்தனர்.
அமைச்சர் ஆய்வு
இந்த நிலையில் பலூன் திருவிழாவை சுற்றுலா வளர்ச்சி துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் ஹெலிகாப்டரில் பொள்ளாச்சியை சுற்றி பார்த்தார். இதை தொடர்ந்து வெப்ப காற்று பலூனை பார்வையிட்டு அவற்றை செயல்படுத்தும் விதம் குறித்து விமானிகளிடம் கேட்டறிந்தார். மேலும் மேலும் அங்கு நடந்த இசை நிகழ்ச்சியையும் அமைச்சர் கண்டுகளித்தார்.
சுற்றுலா மையங்கள்
பின்னர் சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
சுற்றுலாத்துறை மூலமும் இளம் தலைமுறையினரை கவரும் வகையில் சுற்றுலா தளங்களை உருவாக்கும் திட்டத்தின் கீழ் நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் 12.23 ஏக்கர் பரப்பளவில் ரூ.2 கோடியே 22 லட்சம் மதிப்பிலும், நீலகிரி மாவட்டம் ஊட்டியில் 7.31 ஏக்கர் பரப்பளவில் ரூ.3 கோடியே 20 லட்சம் மதிப்பிலும், திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மன்னவனூரில் 7 ஏக்கர் பரப்பளவில் ரூ.1 கோடியே 75 லட்சம் மதிப்பிலும் சுற்றுலா மையங்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
பொள்ளாச்சியில் பலூன் திருவிழாவிற்கு நுழைவு கட்டணம் அதிகமாக வசூலிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டணத்தை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும். பா.ஜனதா தலைவர் அண்ணாமலை எதையும் சரியாக பேசுவதில்லை. யாரோ சொல்லி கொடுப்பதை வைத்து பேசி வருகிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.