ரூ.11 கோடியில் 220 வீடுகள் கட்டும் பணியை அமைச்சர் ஐ.பெரியசாமி ஆய்வு

இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு முகாமில் ரூ.11 கோடியில் 220 வீடுகள் கட்டும் பணியை அமைச்சர் ஐ.பெரியசாமி ஆய்வு செய்தார்.

Update: 2023-04-09 16:26 GMT

வேலூரை அடுத்த மேல்மொணவூரில் இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு முகாமில் ரூ.11 கோடி மதிப்பில் 220 வீடுகள் கட்டும் பணிகள் நடந்து வருகிறது. இந்த கட்டுமான பணியை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி நேற்று நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது அவர் ஒரு வீட்டில் கட்டப்பட்டுள்ள அறைகள், தரையில் பதிக்கப்பட்டிருந்த டைல்ஸ், அறைக்கதவுகள் உள்ளிட்டவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் வீடுகள் கட்டும் பணியின் தற்போதைய நிலவரம், அனைத்து பணிகளும் நிறைவடையும் காலம் பற்றி அரசு அதிகாரிகள், ஒப்பந்ததாரரிடம் கேட்டறிந்து அனைத்து பணிகளையும் தரமாக உரிய காலத்தில் விரைந்து முடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

பின்னர் அமைச்சர் இதுதொடர்பாக நிருபர்களிடம் கூறுகையில், இலங்கை தமிழர்களுக்கு வீடுகள் ஏற்கனவே திட்டமிட்டப்படி சிறப்பான முறையில் கட்டி கொடுக்கப்படும். வீட்டின் கழிவுநீர் செல்வதற்கு உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என்று கூறினார். இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை கொடுப்பது தொடர்பான கேள்விக்கு, வருகிற நாடாளுமன்ற தேர்தலுக்கு பின்னரே இதுபற்றி தெரிவிக்க முடியும் என்றார்.

ஆய்வின்போது கலெக்டர் குமாரவேல்பாண்டியன், ஏ.பி.நந்தகுமார் எம்.எல்.ஏ., மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் மு.பாபு, மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி, வேலூர் ஒன்றியக்குழு தலைவர் அமுதா ஞானசேகரன், தாசில்தார் செந்தில், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உள்பட பலர் உடனிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்