தமிழ் பாடத்தில் 100 மதிப்பெண் பெற்ற மாணவிக்கு அமைச்சர் ரூ.50 ஆயிரம் பரிசு

எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வில் தமிழ் பாடத்தில் ௧௦௦ மதிப்பெண் பெற்ற மாணவி துர்காவிற்கு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ரூ.50 ஆயிரம் பரிசு வழங்கி பாராட்டினார்.

Update: 2022-06-22 14:46 GMT

எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வில் திருச்செந்தூர் மாணவி துர்கா தமிழ் பாடத்தில் 100-க்கு 100 மதிப்பெண் பெற்று சாதனை படைத்தார். இதனை தொடர்ந்து அவருக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

அதன்படி மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மாணவி துர்காவிற்கு தூத்துக்குடியில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து பாராட்டி ரூ.50 ஆயிரம் பரிசு வழங்கினார். நிகழ்ச்சியில் மாநில தி.மு.க. மாணவர் அணி துணை அமைப்பாளர் உமரிசங்கர் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, டுவிட்டர் மூலம், மாணவிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து உள்ளார். தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் சார்பில் கலெக்டர் செந்தில்ராஜ் மாணவி துர்காவுக்கு பரிசு வழங்கி பாராட்டினார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன், மாணவியை நேரில் அழைத்து பரிசு வழங்கி பாராட்டினார்.

தமிழக போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு தொலைபேசியில் தொடர்பு கொண்டு மாணவியை பாராட்டினார்.

Tags:    

மேலும் செய்திகள்