முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டத்தால்மாணவர்களுக்கு ஊட்டச்சத்துகுறைபாடு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளதுஅமைச்சர் கீதாஜீவன் பெருமிதம்
முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டத்தால் மாணவர்களுக்கு ஊட்டச்சத்து குறைபாடு இல்லாத நிலை ஏற்பட்டு உள்ளது என்று அமைச்சர் கீதாஜீவன் பெருமிதத்துடன் கூறினார்.
சேலம்,
காலை உணவு திட்டம்
சேலம் மணக்காடு மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம் செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளிக்கு சமூக நலத்துறை அமைச்சர் கீதாஜீவன் நேற்று காலை வந்தார். காலை உணவு திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு நடத்தினார். தொடர்ந்து கலெக்டர் கார்மேகம், மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ் ஆகியோரிடம் காலை உணவு திட்டம் செயல்படுத்தப்படுவது குறித்து கேட்டு அறிந்தார்.
பின்னர் மாணவ, மாணவிகளுக்கு சமைத்து வைக்கப்பட்டு இருந்த காலை உணவை ருசித்து பார்த்தார். தொடர்ந்து மாணவ, மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி உணவு வழங்கினார்.
அதன் பிறகு அமைச்சர் கீதாஜீவன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
சிறப்பாக செயல்படுத்தப்படுகிறது
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரடி கட்டுப்பாட்டில் காலை உணவு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. எத்தனை மணிக்கு உணவு தயாராகிறது. எத்தனை மணிக்குள் பள்ளிகளுக்கு சென்று அடைகிறது என்று கண்காணிக்கப்படுகிறது.
இந்த திட்டம் மூலம் மாணவர்களின் கல்வி திறன், வருகை அதிகரித்து உள்ளது. சேலம் மாநகராட்சியில் உள்ள 54 தொடக்கப்பள்ளிகளில் படிக்கும் 5,447 மாணவ, மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்படுகிறது. காலை உணவு திட்டம் மூலம் மாணவர்களிடம் ஊட்டச்சத்து குறைபாடு இல்லாத நிலை ஏற்பட்டு உள்ளது. அதன்படி இந்த திட்டம் பெற்றோர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று உள்ளது.
தீவிர நடவடிக்கை
2023-24-ம் ஆண்டில் இந்த திட்டம் விரிவுபடுத்தப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து உள்ளார். அதன்படி அனைத்து அரசு பள்ளிகளிலும் இந்த திட்டம் விரிவுபடுத்தப்படும். கோவில்கள், சாலையோரங்களில் உணவுக்கு தவிக்கும் குழந்தைகள் இருப்பது தெரிந்தால், அவர்களை பள்ளியில் சேர்த்து, உணவு வழங்கி கல்வி பயிற்றுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும். குழந்தை திருமணங்களை தடுக்க அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் குழந்தை திருமணம் அதிகம் நடக்கிறது. இதை தடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் காதலித்து அவர்களாகவே திருமணம் செய்து கொள்வதால், குழந்தை திருமணம் அதிகமாக உள்ளது. குழந்தை திருமணம் நடப்பது குறித்து தகவல் கிடைத்தால், அந்த திருமணங்களை நிறுத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம். 18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் திருமணம் செய்வது தெரிந்தால், கோர்ட்டு மூலம் பல்வேறு நடவடிக்கைகளும் எடுக்கப்படுகிறது. இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் 18 வயது முடியாதவர்களுக்கு திருமணம் செய்து வைப்பது இல்லை. திருமண பதிவும் செய்வது இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து அய்யந்திருமாளிகையை அடுத்த ராமநாதபுரம் தொடக்கப்பள்ளியில் ஆய்வு மேற்கொண்டு மாணவ, மாணவிகளுக்கு உணவு வழங்கினார். இந்த ஆய்வின் போது வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ., மேயர் ராமச்சந்திரன், துணை மேயர் சாரதாதேவி, உதவி கலெக்டர் விஷ்ணுவர்த்தினி, மாவட்ட சமூக நல அலுவலர் ரஞ்சிதாதேவி, கவுன்சிலர்கள் சங்கீதா நீதிவர்மன், மூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.