எழும்பூர் கோ-ஆப்டெக்சில் மெய்நிகர் ஆடை அலங்கார கணினி வசதி மையம் - அமைச்சர் காந்தி திறந்து வைத்தார்

ஆடைகளை தேர்வு செய்வதற்காக எழும்பூரில் உள்ள கோ-ஆப்டெக்சில் மெய்நிகர் ஆடை அலங்கார கணினி வசதி மையத்தை அமைச்சர் காந்தி திறந்து வைத்துள்ளார்.

Update: 2023-08-09 03:35 GMT

ஆடைகளை தேர்வு செய்வதற்காக எழும்பூரில் உள்ள கோ-ஆப்டெக்சில் மெய்நிகர் ஆடை அலங்கார கணினி வசதி மையத்தை அமைச்சர் காந்தி திறந்து வைத்துள்ளார்.சென்னை,

சென்னை எழும்பூரில் உள்ள கோ-ஆப்டெக்ஸ் வளாகத்தில் 9-வது தேசிய கைத்தறி தினம் நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது. இதையொட்டி, கைத்தறி நெசவின் மூலம் தயார் செய்யப்படும் துப்பட்டாக்கள், பைகள், வீட்டு உபயோக துணிகள் மற்றும் தோடர் கை வேலைபாடு துணி ரகங்கள் உள்ளிட்ட பிரத்யேகமான கைத்தறி விற்பனை செய்ய, கோ-ஆப்டெக்சில் கைத்தறி அலங்கார பொருட்கள் விற்பனை நிலையத்தை கைத்தறி மற்றும் துணிநூல் அமைச்சர் எம்.ஆர்.காந்தி திறந்து வைத்தார்.

தொடர்ந்து, சென்னை கோ-ஆப்டெக்சில் நெசவாளர் பயிற்சி மையத்தை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்து, 20 பேருக்கு பயிற்சி சேர்க்கைக்கான ஆணை மற்றும் மாநில அளவிலான சிறந்த வடிவமைப்புக்கான பாராட்டு சான்றிதழையும் வழங்கினார்.

ஆமதாபாத் தேசிய வடிவமைப்பு மையம், சென்னை மற்றும் பெங்களூரு தேசிய ஆடை அலங்கார வடிவமைப்பு நிறுவனம் மூலம் உருவாக்கப்பட்ட 1,000 புதிய வடிவமைப்புகளை கே.என்.நேரு அறிமுகம் செய்து வைத்தார். புதிய வடிவமைப்புகளில் உருவாக்கப்பட்ட கைத்தறி பட்டு மற்றும் பருத்தி சேலை ரகங்களை வாடிக்கையாளர்கள் தாங்கள் விரும்பும் வடிவமைப்புகளை உண்மையிலேயே தாங்கள் அணிவது போன்று மெய்நிகர் காட்சி மூலம் ஆடைகளை தேர்வு செய்துக்கொள்வதற்கு ஏதுவாக கோ-ஆப்டெக்சில் நிறுவப்பட்டுள்ள மெய்நிகர் ஆடை அலங்கார கணினி வசதி மையத்தினை காந்தி திறந்து வைத்தார்.

தமிழ்நாடு அரசால் 2022-23-ம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட மாநில அளவிலான சிறந்த இளம் வடிவமைப்பாளர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டு பரிசு பெற்ற 22 இளம் வடிவமைப்பாளர்களுக்கு சான்றிதழ் மற்றும் ரூ.10 ஆயிரம் வீதம் ஊக்கத்தொகையை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார்.

முதியோர் ஓய்வூதிய திட்டத்தின் கீழ் 20 பயனாளிகளுக்கு ஓய்வூதிய ஆணையையும், முத்ரா கடன் திட்டத்தின் கீழ் 20 பயனாளிகளுக்கு கடனுதவி ஆணையையும் மற்றும் நெசவாளர்களுக்கு வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் 5 பயனாளிகளுக்கு வீட்டுமனை பதிவு ஆணையையும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு வழங்கினார்.

நிகழ்ச்சியில், பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, ஐ.பரந்தாமன் எம்.எல்.ஏ., துணை மேயர் எம்.மகேஷ்குமார், கவுன்சிலர் பாத்திமா முசாபர் அகமது, கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர்த்துறை அரசு முதன்மைச்செயலாளர் தர்மேந்திர பிரதாப் யாதவ், கைத்தறி துறை கமிஷனர் விவேகானந்தன், துணிநூல் துறை கமிஷனர் வள்ளலார், தமிழ்நாடு கதர் கிராம தொழில் வாரிய முதன்மை செயல் அலுவலர் சுரேஷ்குமார் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்