டீ போட்டு கொடுத்து வாக்கு சேகரித்த அமைச்சர் சி.வி.கணேசன்பிரசார கூட்டத்தில் கே.எஸ்.அழகிரி பங்கேற்பு

அமைச்சர் சி.வி.கணேசன்

Update: 2023-02-14 19:30 GMT

ஈரோட்டில் டீ போட்டு கொடுத்து அமைச்சர் சி.வி.கணேசன் வாக்கு சேகரித்தார். தேர்தல் பிரசார கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி பங்கேற்றார்.

டீ போட்டு வாக்கு சேகரிப்பு

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. கூட்டணியின் சார்பில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவு தெரிவித்து ஈரோடு திருநகர் காலனி பகுதியில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் தினமும் தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்.

இந்தநிலையில் ஈரோடு கிருஷ்ணம்பாளையம் பகுதியில் அமைச்சர் சி.வி.கணேசன் வாக்கு சேகரித்தார். அப்போது அந்த பகுதியில் உள்ள ஒரு டீக்கடைக்கு சென்ற அவர், பொதுமக்களுக்கு டீ போட்டு கொடுத்து கை சின்னத்துக்கு வாக்குகளை சேகரித்தார்.

பிரசார கூட்டம்

இதேபோல் தி.மு.க. சார்பில் தேர்தல் பிரசார கூட்டம் ஈரோடு கிருஷ்ணம்பாளையத்தில் நேற்று மாலை நடந்தது. கூட்டத்துக்கு தி.மு.க. மாவட்ட பொருளாளரும், மாநகராட்சி முதலாவது மண்டல தலைவருமான பி.கே.பழனிசாமி தலைமை தாங்கினார். சபா ராஜேந்திரன் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார்.

இந்த கூட்டத்தில் அமைச்சர் சி.வி.கணேசன், காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்டு பேசினார்கள். அப்போது அவர்கள், தி.மு.க. ஆட்சியின் சாதனைகள், பெண்களுக்காக நிறைவேற்றப்பட்ட திட்டங்கள், எம்.எல்.ஏ.வாக இருந்த திருமகன் ஈவெரா ஈரோடு மாநகராட்சியில் கொண்டு வந்த திட்டங்கள், அடிப்படை வசதிகளை நிறைவேற்றுவதற்கான திட்டங்கள் குறித்து பொதுமக்களிடம் விளக்கி கூறினார்கள்.

கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர் மக்கள் ராஜன், தி.மு.க. வார்டு செயலாளர் மோகனசுந்தரம் மற்றும் கடலூர் மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்