தாடண்டர் நகரில் உள்ள அரசு பணியாளர்கள் குடியிருப்பு கட்டிடத்தில் அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு

தாடண்டர் நகரில் உள்ள அரசு பணியாளர்கள் குடியிருப்பு கட்டிடத்தில் அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு செய்தார்.

Update: 2022-11-10 08:04 GMT

சென்னை சைதாப்பேட்டை தாடண்டர் நகரில் உள்ள அரசு பணியாளர்கள் குடியிருப்பு கட்டிடத்தை பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு நேற்று ஆய்வு செய்தார்.

இதையடுத்து, மிகவும் பழைய குடியிருப்பு கட்டிடங்கள், புதிதாக குடியிருப்பு கட்டப்பட உள்ள இடம், சுற்றியுள்ள சாலைகள், வாகன நிறுத்தும் இடம், மழைநீர் வடிகால்வாய்கள், கழிவுநீர் கால்வாய்கள் மற்றும் உட்கட்டமைப்பு போன்றவற்றையும் அவர் ஆய்வு செய்தார்.

பின்னர் நிருபர்களிடம் அமைச்சர் எ.வ.வேலு கூறியதாவது:-

சென்னை சைதாப்பேட்டை தொகுதிக்கு உட்பட்ட தாடண்டர் நகரில் தமிழக அரசின் பல்வேறு துறைகளை சார்ந்த துறை அலுவலர்கள், பணியாளர்கள் ஆகியோர்களுக்கு அரசின் சார்பாக கட்டி கொடுக்கின்ற குடியிருப்புகள் உள்ளன. பல்வேறு துறையை சார்ந்த அலுவலர்கள், அரசு ஒதுக்கீட்டில் குடியிருக்கிறார்கள். ஏ-வகை குடியிருப்புகள் 100, பி-வகை குடியிருப்புகள் 136, சி-வகை குடியிருப்புகள் 812 உள்ளன. பொதுப்பணித்துறையை சார்ந்த பொறியாளர்களுக்கான 41 குடியிருப்புகள் உள்ளன.

தாடண்டர் நகர் வளாகத்தில், 72 பழைய குடியிருப்புகள் இருக்கின்றன. அவற்றை இடித்துவிட்டு, புதிய குடியிருப்புகள் கட்டுவதற்கு அதிகாரிகளுக்கு தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. பராமரிப்பு பணிகள், கழிவுநீர் சுத்திகரிப்பு போன்ற பணிகள் எல்லாம் சரிவர நடைபெறுகிறதா? என்பதையும், அனைத்து கட்டிடங்களையும் இணைத்திடும் வகையில் உட்புறச்சாலை அமைக்க, அரசு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளதால், அந்த பணிகள் எல்லாம் நடைபெறுகிறதா? என்பதையும் ஆய்வு செய்தேன்.

புதிதாக, 190 பி-வகை குடியிருப்புகள், ரூ.88.49 கோடியில் கட்டுவதற்கு ஆணைகள் பிறப்பிக்கப்பட்டு, ஒப்பந்தம் வழங்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த கட்டிடம் தரமாக கட்டப்படுகிறதா?, மணல் பரிசோதனை செய்தார்களா?, கம்பிகள் தரமானதாக உள்ளதா?, தண்ணீரை பரிசோதித்தார்களா?, என்பதையெல்லாம் ஆய்வு செய்ய, ஆய்வகம் உள்ளதா? என்பதும் ஆய்வு செய்யப்பட்டது.

இந்த குடியிருப்பு, 19 பல்லடுக்கு குடியிருப்பு கட்டிடம் ஆகும். இதில், 10 அடுக்கு குடியிருப்புகள் கட்டுமான பணி முடிவடைந்துள்ளது. இன்னும் 9 அடுக்கு குடியிருப்புகள் கட்டப்படவேண்டியுள்ளதால், அவற்றை தரமாகவும், விரைவாகவும் கட்டி முடிக்க உத்தரவிட்டுள்ளேன்.

மேலும், புதியதாக 190 சி-வகை குடியிருப்புகள் கட்டுவதற்கு, 1.11.2022 அரசு ஆணை வெளியிட்டுள்ளது. இன்னும் ஒப்பந்தப்புள்ளி கோரப்படவில்லை. விரைவாக ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு, அந்த 190 "சி"வகை குடியிருப்புகள் கட்டப்படும். அரசு குடியிருப்புகளில் வசிக்கும், அரசு அலுவலர்களில் சிலர் கட்டிடங்களில் 'பெயிண்ட்' அடிக்கவேண்டும், சாலைகள் விரிவுப்படுத்தவேண்டும் என்றும், கழிவுநீர் கால்வாய்கள் அமைக்கவேண்டும் என்றும், என்னிடம் கோரினார்கள். அவர்களுடைய கோரிக்கைகளை எல்லாம், முதல்-அமைச்சரின் கவனத்துக்கு எடுத்துச்சென்று, விரைவில் அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றி தரப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆய்வின்போது, பெருநகர சென்னை மாநகராட்சி துணை மேயர் மகேஷ்குமார், பொதுப்பணித்துறை முதன்மை தலைமை பொறியாளர் இரா.விஸ்வநாத், சென்னை மண்டல தலைமை பொறியாளர் ஆயிரத்தரசு ராஜசேகரன் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்