கொல்லிமலையில்ரூ.1.46 கோடியில் பிரேத பரிசோதனை கூடம் அமைக்கப்படும்அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேச்சு

Update: 2023-05-29 19:00 GMT

சேந்தமங்கலம், மே.30-

கொல்லிமலையில் ரூ.1 கோடியே 46 லட்சம் மதிப்பில் பிரேத பரிசோதனை கூடம் அமைக்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசினார்.

ரத்த வங்கி அறை

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் செம்மேடு அரசு ஆஸ்பத்திரியில் ரூ.47 லட்சம் மதிப்பில் ரத்த வங்கி அறை திறப்பு விழா நேற்று நடந்தது. சுகாதார பணிகள் துணை இயக்குனர் பூங்கொடி வரவேற்றார். நாமக்கல் சின்ராஜ் எம்.பி., கே.ஆர்.என்.ராஜேஷ்குமார் எம்.பி., வனத்துறை அமைச்சர் மதிவேந்தன், எம்.எல்.ஏ.க்கள் பொன்னுசாமி, ராமலிங்கம், மாவட்ட வருவாய் அலுவலர் மணிமேகலை, நாமக்கல் மருத்துவ கல்லூரி டீன் சாந்தா அருள்மொழி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டு ரத்த வங்கி அறையை திறந்து வைத்தார். இதையடுத்து வனச்சரகர் அலுவலகம் அருகே அமைக்கப்பட்டிருந்த விழா மேடையில் இருந்தவாறு எர்ணாபுரம் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் வட்டார பொது சுகாதார அறை, நாமகிரிப்பேட்டை மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் புறநோயாளிகள் பிரிவு கட்டிடம், சேந்தமங்கலம் அருகே பச்சையாம்பட்டி புதூரில் துணை சுகாதார நிலையம் ஆகியவற்றை காணொலி காட்சி மூலம் அமைச்சர் திறந்து வைத்தார்.

பிரேத பரிசோதனை கூடம்

இதையடுத்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது:- மலைவாழ் மக்கள் ரத்ததானம் செய்ய முன் வரவேண்டும். கொல்லிமலை பகுதியில் பிரேத பரிசோதனை கூடம் அமைக்க வேண்டும் என்று மலைவாழ் மக்களின் எதிர்பார்ப்பை பொன்னுசாமி எம்.எல்.ஏ. மூலம் தெரிந்து கொண்டேன். அதன்பேரில் ரூ.1 கோடியே 46 லட்சத்தில் கொல்லிமலையில் பிரேத பரிசோதனை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் மருத்துவமனைகளில் பணியாற்றும் செவிலியர்கள் இங்கேயே தங்கி வேலை பார்க்கும் வகையில் ரூ.1 கோடியே 4 லட்சம் மதிப்பில் கட்டுவதற்கு ஏற்பாடு செய்யப்படும்.

முதல்-அமைச்சர் வெளிநாட்டில் இருந்து வந்ததும் அவருடன் டெல்லி சென்று மத்திய சுகாதாரத்துறை மந்திரி மாண்டியாவை சந்தித்து திருச்சியில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கு வலியுறுத்த உள்ளோம். கொல்லிமலையில் சித்த மருத்துவ ஆராய்ச்சி நிலையம் தொடங்குவதற்கும் ஏற்பாடு செய்யப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

சிறப்பு சிகிச்சை

இதனை தொடர்ந்து அமைச்சர் மதிவேந்தன் பேசினார். தொடர்ந்து கொல்லிமலை ரத்தம் வங்கி அறையில் சேந்தமங்கலம் போலீசார் ரத்ததானம் செய்தனர். இந்த விழாவில் சுகாதார பணிகள் இணை இயக்குனர் ராஜ்குமார், சேந்தமங்கலம் அட்மா குழு சேர்மன் அசோக்குமார், கொல்லிமலை அட்மா குழு சேர்மன் செந்தில் முருகன், கொ.ம.தே.க. தெற்கு மாவட்ட செயலாளர் மாதேஸ்வரன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சரவணன், தனபால், தகவல் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பாளர்கள் விஸ்வா, ஞானசேகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இன்று (செவ்வாய்க்கிழமை) செம்மேடு அரசு மருத்துவமனையில் மலைவாழ் மக்களில் ஹீமோகுளோபின் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம், மலைவாழ் மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட உள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்