அமைச்சர் தலைமையில் வயல்மட்ட கள ஆய்வு

பொங்கலூர் அருகே தென்னையில் பூச்சி, நோய் தாக்குதல் குறித்த வயல்மட்ட கள ஆய்வில் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பங்கேற்று ஆய்வு மேற்கொண்டார்.

Update: 2023-05-05 18:04 GMT

பொங்கலூர் அருகே தென்னையில் பூச்சி, நோய் தாக்குதல் குறித்த வயல்மட்ட கள ஆய்வில் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பங்கேற்று ஆய்வு மேற்கொண்டார்.

அமைச்சர் ஆய்வு

திருப்பூர் மாவட்டம் பொங்கலூர் ஊராட்சி ஒன்றியம் பெருந்தொழுவு ஊராட்சியில் வேளாண்மை உழவர் நலத்துறை மற்றும் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் சார்பில் தென்னையில் பூச்சி, நோய் மற்றும் உர நிர்வாகம் குறித்த வயல்மட்ட கள ஆய்வு நேற்று நடைபெற்றது. செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தலைமை தாங்கி ஆய்வில் பங்கேற்றார். கலெக்டர் வினீத் முன்னிலை வகித்தார்.

ஆய்வு குறித்து அமைச்சர் கூறியதாவது:-

விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி உழவர் நலத்துறையோடும், வேளாண்மை பல்கலைக்கழகத்துடனும் தொடர்பு ஏற்படுத்த வேண்டும் என்ற வகையில் கள ஆய்வு நடைபெறுகிறது. களப்பணியில் இருப்பவர்களுடன் விவசாயிகள் தொடர்பு கொண்டால் தேவையான இடுபொருள், விளக்கம் பெற முடியும். களப்பணியாளர்களுக்கு வேளாண் பல்கலைக்கழகத்தின் மூலமாக பயிற்சி வழங்கப்படுகிறது.

வேளாண் கருவிகள்

அவர்கள் அதற்கான விளக்கத்தை ஆங்காங்கே அமைக்கப்பட்டுள்ள வேளாண் விரிவாக்க மையத்தின் தகவல் பலகை, கூட்டுறவு வங்கி, பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு மையம், ஊராட்சி மைய அலுவலகங்கள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் காலம், நேரம், இடம் குறித்த விவரங்களை தெரிவித்து விவசாயிகள் பங்கேற்க வழிவகை செய்யப்படும்.

பொங்கலூர் ஒன்றியத்தில் வட்டமலைபாளையம், பெருந்தொழுவு, கேத்தனூர் ஊராட்சிகள் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தில் தேர்வு செய்யப்பட்டு வேளாண் கருவிகள் கட்டணமில்லாமல் வழங்கப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

வெள்ளை ஈ தாக்குதல்

இந்த ஆய்வில் தென்னை வளர்ச்சி வாரிய உறுப்பினர் ராஜமாணிக்கம், தென்னையில் வெள்ளை ஈ தாக்குதல், கருந்தலை புழு தாக்குதல், காண்டாமிருக வண்டு கட்டுப்படுத்துதல் குறித்து விளக்கம் அளித்தார். ஆழியார் தென்னை ஆராய்ச்சி நிலைய பயிர் நோயியல் துறை விஞ்ஞானி லதா, களைக்கொல்லி தெளிப்பதை தவிர்க்குமாறு கூறினார்.

இந்த ஆய்வில் இணை இயக்குனர் (வேளாண்மை) மாரியப்பன், துணை இயக்குனர் (வேளாண்மை) சுருளியப்பன், துணை இயக்குனர் (தோட்டக்கலைத்துறை) சுரேஷ்ராஜா, பொங்கலூர் கே.வி.கே. திட்ட ஒருங்கிணைப்பாளர் இளையராஜன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) கிருஷ்ணவேணி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்